Published : 02 May 2020 10:41 AM
Last Updated : 02 May 2020 10:41 AM

முழு அடைப்பு அறிவிப்பை பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்காதது மக்கள் கோபம் குறித்த பிரதமரின் அச்சத்தையே காட்டுகிறது: மோடி மீது திருமாவளவன் விமர்சனம்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

எதிர்வரும் 14 நாட்களையும்கூட உருப்படியாகப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், "மே 3 ஆம் தேதிக்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு நாடு தழுவிய பொது அடைப்பை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை தேவையானதுதான். என்றாலும், முழு அடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

முழு அடைப்பு குறித்த அறிவிப்பைப் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிடாமல் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலமாக வெளியிட்டிருப்பது மக்களின் கோபம் குறித்த பிரதமரின் அச்சத்தையே காட்டுகிறது. பொதுமக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் இவர்கள் வழங்கப் போவதில்லை என்பதன் அடையாளமாகவே இதை கருதத் தோன்றுகிறது.

நோய் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கு முழு அடைப்பு என்ற அணுகுமுறை ஓரளவுக்குப் பயன்பட்டு இருக்கிறது என்றாலும் இதுவரையிலான முழு அடைப்புக் காலத்தை உரிய விதத்தில் மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதிவிரைவு சோதனைகள் செய்யவும், நோயால் பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளைப் போதுமான அளவில் ஏற்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்புக் கருவிகளை தருவித்துக் கொள்வதற்கும் இந்த முழு அடைப்பு காலத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதனால் தான் மக்கள் எவ்வளவு கட்டுப்பாடு காத்தும் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை இவர்களால் மட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பது மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் போதவில்லை என்பதையே காட்டுகிறது.

எதிர்வரும் 14 நாட்களையும்கூட உருப்படியாகப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு தவறினால் முழு அடைப்பை சரிவர நடைமுறைப்படுத்த முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். வேலை இழப்புகளைத் தடுப்பதற்கும், நிவாரணம் அளிப்பதற்குமான அறிவிப்புகளை உடனே வெளியிடுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x