Published : 29 Apr 2020 06:01 PM
Last Updated : 29 Apr 2020 06:01 PM

பறிக்காமல் அழுகும் கேரட்டுகள்: பரிதவிப்பில் ஊட்டி விவசாயிகள்!

விவசாயத்திற்கு பொதுமுடக்கத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம், வெளியூர்களில் சிக்கிக்கொண்டிருக்கும் விவசாயக் கூலிகளை அழைத்து வர முடியாத சூழல் போன்றவற்றால் விவசாய விளைபொருட்கள் தோட்டங்காடுகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், காய்கறிகள் தெருவில் கொட்டப்படும் நிலையும் உருவாகியிருக்கிறது.

குறிப்பாக, ஊட்டியில் கேரட் பயிர் செய்யும் விவசாயிகளும், கேரட் பறிக்கும் தொழிலாளர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமன்றி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலேயே மலைக் காய்கறி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் இடம் நீலகிரி. இங்கே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு உள்ளிட்டவை பயிராகின்றன. இங்கு உற்பத்தியாகும் காய்கனிகள் நீலகிரி, கோவை மாவட்டங்களின் எல்லைப் பகுதியான மேட்டுப்பாளையம் சந்தைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

எனினும், கேரட் லாரி லோடுகள் அதிக அளவில் பறப்பது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குத்தான். அதற்குக் காரணம், மேட்டுப்பாளையத்தை விடவும் சென்னையில் இரட்டிப்பு விலையில் கேரட்டுகள் வாங்கப்படுவதுதான். அதிகாலை சென்னை மார்க்கெட்டுக்கு வரும் கேரட் லாரி லோடுகளுக்குத் தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை அதிகம் கிடைக்கும். நேரம் ஆக, ஆக கேரட் வரத்தைப் பொறுத்து அதன் விலை குறையும். எனவே, முதல் லோடு கேரட்டுகளை சென்னைக்குக் கொண்டு செல்வதில் ஊட்டி கேரட் லாரி டிரைவர்களிடம் பெரும் போட்டியே நடக்கும். ஊட்டியிலிருந்து சென்னைக்கு கேரட் லோடு கொண்டுசெல்லும் லாரி டிரைவர்களுக்கு இரண்டு நாள் கூலியாக மட்டும் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்குமாம்.

அதேபோல் இந்த கேரட் தோட்டங்களில் பறித்துக் கழுவி, அதன் இலை தழைகளைக் கத்தரித்து மூட்டையாக்கி, லோடு ஏற்ற ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் அன்றாடக்கூலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இதில், உள்ளூர் தொழிலாளர்கள் காலை 3 மணிக்கு லாரியில் ஏறிப் புறப்பட்டால் மதியம் 1 மணி வரை வேலை செய்துவிட்டு ரூ.1,000 வரை கூலியாகப் பெறுவர்.

தவிர இவர்களுக்குக் காலை டிபன், மதிய உணவு, வரும்போது உணவும் வழங்கப்படும். இத்தொழிலில் உள்ளூர் கூலிகளுக்கும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தொழில் போட்டியும் உண்டு. அதற்கேற்ப கூலியை வடமாநிலத் தொழிலாளர்கள் ரூ.600 வரை குறைத்தும் வாங்குகின்றனர்.

தற்போது பொதுமுடக்கம் காரணமாக இந்தத் தொழில் முழுமையாகவே துண்டுபட்டு நிற்கிறது. தோட்டத்தில் காய்கனிகள் பறிக்கலாம். லாரியில் ஏற்றலாம் என்றாலும் போலீஸ் கெடுபிடிகள் காரணமாக லாரிகள் வாடகைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் நினைத்த இடங்களுக்குப் போய்க் கூலித் தொழிலாளர்களை ஏற்றி வர முடிவதில்லை. அப்படி ஏற்றினால் தனிமனித விலகலைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி லாரிக்காரர் வழக்கைச் சந்திக்க நேரிடும். எனவே லாரிகளும் முன்வராததால், தொழிலாளர்கள் எல்லாம் காய்கனி தோட்டங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதற்கிடையே, விவசாயிகளே காய்கனிகளைப் பறித்து தங்களிடம் உள்ள வாகனங்கள் மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு எடுத்துவரத் தொடங்கினர். ஆனால், சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் 20 பேருக்குக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலையில் அங்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ரெட் அலர்ட் சீல் வைக்கப்பட்டது. அதற்குள் மார்க்கெட் பகுதியும் மாட்டிக்கொள்ள அந்த வியாபாரத்திலும் மண் விழுந்தது. இதனால் வருத்தமடைந்த விவசாயிகள், வாகனங்களில் ஏற்றிச் சென்ற காய்கனிகளை ஆங்காங்கே வசித்தவர்களுக்கு இலவசமாகத் தந்ததோடு, சாலையிலும் கொட்டிவிட்டு வந்தனர். இதன் பின்னணியில் ஊட்டி விவசாய நிலங்களில் காய்கனிகளை அறுவடை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

ஊட்டியில் விளையும் பல்வேறு காய்கனிகளைச் சில வார காலம் ஸ்டாக் வைக்கலாம். ஆனால், கேரட்டைப் பொறுத்தவரை ஒருசில நாட்கள்கூட வைக்க முடியாது. சீக்கிரமே அழுகிவிடும் என்பதால் அதை செடிகளிலேயே விட்டுவிடுகின்றனர் கேரட் விவசாயிகள். இதனால் விளைநிலங்களிலேயே கேரட்டுகள் அழுகிக்கொண்டிருக்கின்றன.

கேரட் பறிக்கும் விவசாயக் கூலிகள் ஊட்டி காந்தல் பகுதியில் மட்டும் முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கே மட்டும் 3 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டதால், இங்குள்ள தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள ஒரு தொழிலாளர் இதுகுறித்துக் கூறும்போது, “தினம்தோறும் காலை 3 மணிக்கே எங்களுக்கு லாரி வந்துடும். 4 மணிக்கு கேரட் கிழங்கு எடுக்க புகுந்தோம்னா 1 மணிக்குள்ளே வேலை முடிஞ்சிடும். தோட்டத்துல கேரட் பிடுங்கி எடுத்துக் கழுவி, அதை முழுசா மூட்டையாக்கி லோடு ஏத்தணும். இப்ப சென்னைக்கு லோடுகள் போறதில்லை. அதுக்கான ஆளுக வர்றது இல்லை. லாரிகள் இல்லை. வந்தாலும் அவங்க எங்களை அதுல ஏத்திட்டுப் போக முடியாது. அங்கே போனா எங்களுக்கு மூணு வேளை சாப்பாடு கொடுக்கணும். இப்ப எதுக்கும் வழியில்லாம போச்சு. எப்போ ஊரடங்கு முடியும், இயல்பு வாழ்க்கை திரும்பும்னு காத்துட்டு இருக்கோம்” என்றார்.

இந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துயரத்தைப் போக்க, உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x