Last Updated : 06 Mar, 2014 12:00 AM

 

Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

நாகை - மயிலாடுதுறையில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம்: அழைப்பு இல்லாததால் குழப்பத்தில் கம்யூனிஸ்ட்கள்

இன்று நாகப்பட்டினத்தில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதா… கண்டு கொள்ளாமல் இருப்பதா என்று புரியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்.

அதிமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே நாகப் பட்டினம் தொகுதியை தங்களுக்கு கேட்டுள்ளன. ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மீது கூடுதல் எதிர்பார்ப்பு.

ஆனால், புதன்கிழமை மாலை வரை நாகையை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்குவதாக அதிமுக அறிவிக்கவே இல்லை. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில் கலந்துகொள்ளக் கூட அழைப்பில்லை என்பது அவர் களுக்கு கூடுதல் அதிர்ச்சி.

இதனால் உச்சக்கட்ட குழப்பத்தில் சோர்ந்து போயி ருக்கிறார்கள் தோழர்கள். அதேநேரம், அதிமுக வேட்பாளர் கோபாலும் நிம்மதியாக இல்லை. திங்கள்கிழமை பிரச்சாரம் தொடங் கப்போகும் நேரத்தில் யாரோ ஒருவர், ’கம்யூனிஸ்ட்டுக்கு நாகை தொகுதியை ஒதுக்கியாச்சு’ என்று கிளப்பிவிட அமைச்சர் காமராஜும், கோபாலும் திகிலடைந்தார்கள்.

அது வதந்தி என்று தெரிந்த பிறகுதான் கோபால் நிம்மதியானார். அதற்கு முதல்நாள் திருவாரூர் வந்த தா.பாண்டியன், ’நாகைத் தொகுதியை எப்படியும் ஜெயலலிதாவிடம் பேசி வாங்கி விடுவேன்’ என்று கட்சியினருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுப் போனார்.

கம்யூனிஸ்ட்களின் நிலை குறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வான நாகை மாலியிடம் பேசியபோது, ’’எங்கள் கட்சியின் மாநிலக்குழுக் கூடி இதுபற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி செயல்படுவோம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் வீரசேனனிடம் பேசியபோது, "புதன்கிழமை மதியம் வரை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு எதுவும் இல்லை. எனினும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்தும் தொகுதி பிரச்சினை பற்றியும் எங்கள் கட்சி மேல்மட்டக் குழு தான் முடிவு செய்யும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x