Published : 29 Apr 2020 08:25 AM
Last Updated : 29 Apr 2020 08:25 AM

கோவை மாவட்டத்தில் சாலையோரவாசிகள் 43,500 பேருக்கு தினமும் உணவு: ஆட்சியர் கு.ராசாமணி தகவல்

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக்கப்படும் உணவை பார்வையிட்ட ஆட்சியர் கு.ராசாமணி. அருகில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச் செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள்

கோவை

கோவை மாவட்டத்தில் சாலையோரத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் என சுமார் 43,500 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறினார்.

கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார்.பாதுகாப்பான, தரமான முறையில் உணவு தயாரிப்பது குறித்து சங்கத் தலைவர் டி.சீனிவாசன், செயலர் சிவா, மாநிலத் துணைத் தலைவர் வஞ்சிமுத்து, நிர்வாகிகள் பாலச்சந்தர், ஜெகன் உள்ளிட்டோரிடம் விவரங்களைக் கேட்டறிந்த ஆட்சியர், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர்த்து, சாலையோரவாசிகள், தினக்கூலிகள், ஏழைகள் என 43,500 பேருக்கு, அந்தந்த வட்டாட்சியர் அலுவல கங்கள் மூலமாகவும், தன்னார் வலர்களாலும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் வரை உணவு வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, பணியில் இருக்கும் காவலர்கள், மருத்துவம், சுகாதாரப் பணி யாளர்களுக்கும் தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசுக்கு உதவும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச் செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x