Published : 28 Apr 2020 03:09 PM
Last Updated : 28 Apr 2020 03:09 PM

கொங்கு மொழியில் கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம்: தொண்டாமுத்தூர் கிராமங்களில் மைக் செட் குரல்

“ஏனுங்க…எல்லாரும் ஊட்ல பத்தரமா இருக்கீங்களா? ஆமாம்… யாரும் தேவையில்லாம ஊருக்குள்ளே வந்துடாதீங்க. அப்படியே வந்தாலும் வந்த வேலைய பார்த்தமா… மத்தவங்க மேல முட்டாம, தட்டாம காய்கனிகள வாங்கினமா… ஊட்டுக்குப் போனமான்னு இருங்க. அதுலயும் ஊட்ல போனதும் கையை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சோப்பு போட்டு நல்லாக் கழுவுங்க. இல்லைன்னா நம்ம பாடு அவ்வளவுதான்.

நம்மளுக்கு மட்டுமில்லாம, நம்ம குடும்பத்துக்கு, நம்ம ஊருக்குன்னு எல்லாமே துன்பமா போயிரும். இத்தாலிய பார்த்தீங்களா... எவ்வளவு பேரு. எத்தனை உசிரு. புதைக்கறக்கு இடமில்லாமத் திண்டாடறாங்க. பார்க்கவே பாவமா இருக்குங்க. அமெரிக்காவப் பாருங்க. அப்படிப்பட்ட ஊருகளுக்கே அந்தக் கொடுமைன்னா நம்மளை என்ன பாடுபடுத்தும் இந்தக் கரோனா…”

இப்படிக் கொஞ்சும் கொங்கு மொழியில் ஒலிக்கிறது அந்த மைக் செட் குரல். மைக் செட் கட்டிச் செல்லும் அந்த வேன், மக்கள் தென்படும் இடங்களில் நிற்கிறது. அந்த வண்டியை ஓட்டும் இளைஞரே டிரைவர் சீட்டிலிருந்து இறங்குகிறார். ஒரு டீ கேனை எடுத்து ஸ்பீக்கர் பக்கத்தில் வைக்கிறார். அதிலிருந்து கபசுரக் குடிநீரைத் தெருவில் உள்ளவ எல்லாருக்கும் கொடுக்கிறார். இந்தச் சேவையை ஊரடங்கு காலத்திலிருந்து செய்து வருவது ஈஷா யோகா மையம்.

சிவராத்திரி விழா, சிவனுடன் ராத்திரி, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ஈஷா மையத்தைப் பற்றி வேறு வகை சர்ச்சைகள் கிளம்பியிருக்க, இப்படியான பிரச்சாரத்தைச் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் இம்மையத்தினர். ஆலாந்துறை அருகே பூலுவபட்டி பேரூராட்சியில் இந்த மைக் பிரச்சாரம், கபசுரக் குடிநீரை வழங்கிக் கொண்டிருந்த இளைஞரிடம் பேசினேன்.

“இந்த வண்டி இந்த பூலுவபட்டி கிராமத்திற்கு மட்டும்தான். இதேபோல் தொண்டாமுத்தூரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வண்டி மைக் செட் பிரச்சாரத்துடன் கபசுரக் குடிநீர் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் காலை முதல் மாலை வரை இதேதான் எங்க வேலை” என்றார் அந்த இளைஞர்.

பொதுவாக, ‘ஒரு மீட்டர் தனிமனித இடைவெளி விடுங்க, சோப்பு போட்டு கையக் கழுவுங்க’ என்று பொதுமொழியில் பிரச்சாரம் செய்வதைவிட தொண்டாமுத்தூர் கிராமங்களில் இப்படிக் கொங்கு மொழியில் பிரச்சாரம் செய்வது மக்களிடம் நன்றாகவே எடுபடுகிறது. இந்த உத்தியை ஈஷா மையம் கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறார்கள் இப்பகுதி பொதுமக்கள். இதை ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மண் வட்டார மொழியில் முன்னெடுக்க தன்னார்வலர்கள் முன்வரலாமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x