Published : 26 Apr 2020 05:20 PM
Last Updated : 26 Apr 2020 05:20 PM

கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை: அவசரச் சட்டம் பிறப்பித்த தமிழக அரசு

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்தால் கைது நடவடிக்கையும், 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்வததற்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிக்கல் உருவானது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த தனியார் மருத்துவமனை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இது மருத்துவர்கள் மட்டுமின்றி, அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, ''தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவர், மருத்துவப் பணியாளர், பிற துறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்கள் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமையாகும். இதைக் கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்து, 30 நாட்களில் விசாரணை முடிக்கப்படும் என அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்தால் கைது நடவடிக்கையும், 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் (Notified disease) உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் / தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ((Notified disease) உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் / தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939, பிரிவு-74-ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x