Published : 08 Aug 2015 08:41 AM
Last Updated : 08 Aug 2015 08:41 AM

கோவை போலீஸில் தாய் புகார்: குழந்தையை விற்ற தந்தை - மீட்கும் பணியில் தனிப்படை தீவிரம்

ஒரு வயது பெண் குழந்தையை ரூ.63 ஆயிரத்துக்கு தந்தை விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையை மீட்டுத்தர தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார். தனிப்படை போலீஸார் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கோவை சவுரிபாளையம் மட்டசாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (28), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி மீனா (22). இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதுள்ள இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு 3-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. முதல் இருகுழந்தைகளும் சேலத்தில் மீனாவின் பெற்றோர் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.

மதுவுக்கு அடிமையான ராமன், சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். அப்போது, சவுரிபாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் குமாரசாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் 3 பெண் குழந்தைகளை வைத்து பணத்துக்கு சிரமப்படுவதாக புலம்பியுள்ளார். இதற்கு குமாரசாமி, 3-வது பெண் குழந்தையை விற்பதற்கு ஒத்துக் கொண்டால் பணம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவரது யோசனைப்படி கடந்த 28-ம் தேதி மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு குழந்தை காணாமல் போய்விட்டதாக அவரும் புரோக்கரும் நாடகமாடியுள்ளனர். இதனிடையே கணவரிடம் பணம் பழங்குவதைக் கண்டு சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அவர் குழந்தையை ரூ.63 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, கோவைக்கு வந்த மீனா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த 6-ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. ராமன், குமாரசாமியிடம் விசாரணை நடத்திய போலீஸார் கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரின் துணையுடன் புரோக்கர் தங்கசாமியை பிடித்தனர். அவர் மூலம் குழந்தையை வாங்கியவரின் விவரங்களைக் கண்டறிந்துள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x