Published : 25 Apr 2020 07:20 AM
Last Updated : 25 Apr 2020 07:20 AM

பாவத்தைப் போக்கி அருளை வழங்கும் ரமலான்

மவ்லவி டாக்டர் பி.எஸ்.செய்யது மஸ்ஊத் ஜமாலி

ரமலான் என்பது ஒரு மாதத்தின் பெயர். சந்திர நாள்காட்டியின் அடிப்படையி லான அரேபிய மாதங்களில் 9-வது மாதம் ரமலான். இது,‘ரமல்’ எனும் மூலச் சொல்லில்இருந்து வந்தது. ‘ரமல்’ என்றால் கரித்தல், பொசுக்குதல். இந்த புனித மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவில் வழிபாடுகளை நிறைவேற்றி, திருக்குர்ஆனை அதிகமாக ஓதி, நம் பாவங்களுக்காக அழுதுபிரார்த்திக்கும்போது அல்லாஹ் நம் பாவங்களை பொசுக்கி, அருளை வழங்குகிறான் என்பதே இதன் பெயர்க் காரணம்.

இறைவேதம் அருளப்பட்ட எல்லா மதங்களிலும் நோன்பு என்பது வலியுறுத்தப்பட்ட வழிபாடாகவே உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். இறைவனுக்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவற்றை செய்தும், தடை செய்தவற்றை தவிர்த்தும் நடப்பதுதான் இறையச்சம். ஒரு நோன்பாளி, யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருக்கும்போதும்கூட தன்னிடம் உள்ள உணவை உண்ண மாட்டார்; எதையும் குடிக்க மாட்டார்; தாம்பத்திய இச்சையைத் தணித்துக்கொள்ள வாய்ப்பு இருந்தாலும், அதை நிறைவேற்றிக்கொள்ள மாட்டார்.

எளியோருக்கு பரிவு காட்ட வேண்டிய மாதம்

அதேநேரம், வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமே நோன்பு ஆகாது. இவற்றைக் கட்டுப்படுத்துவதுபோல மற்ற பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘‘நோன்பு என்பது பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம். எனவே, நோன்பு நோற்றால் தீய பேச்சு பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் ஏசினால், சண்டையிட்டால்கூட, ‘நான் நோன்பாளி’ என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்’’ என்கிறது ஒரு நபிமொழி (நூல்: புகாரி, அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா).

நபிகளார் (ஸல்) அவர்கள், ‘‘மகத்துவம் நிறைந்த ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் நமக்கு கடமை ஆக்கியுள்ளான். ஏழை, எளியோர், தேவை உள்ளோருக்கு அனுதாபமும், பரிவும் காட்டி உதவவேண்டிய மாதம் இது’’ என்று உபதேசிப்பார்கள்.

முஸ்லிம்கள் இந்த மாதம் முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான உபரி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார்கள். அறியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். ஏழை, எளியோருக்கு உதவிவழங்கி இறைவனின் அன்பையும், அருளையும், திருப்தியையும் பெற விழைகிறார்கள்.

பருவமடைந்த முஸ்லிம் ஆண், பெண்அனைவரும் நோன்பு இருப்பது கடமை. இருப்பினும், நோயும், பயணமும் நோன்பில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் காரணங்கள்.

‘‘நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் அந்நாட்களில் நோன்புநோற்காமல், மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்க வேண்டும். இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். அவன்உங்களுக்கு கஷ்டத்தைத் தர விரும்பவில்லை.’’ (அல்குர்ஆன் - 2:185)

முதுமை, நீங்காத நோய் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்புக்கு பதிலாக ஓர் ஏழைக்கு உணவுஅளிக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் நோன்பு நோற்பது கடமை இல்லை. அவர்கள் நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதும் இல்லை.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்பதால் தனக்கோ, குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சினால் நோன்பு இருக்கத் தேவை இல்லை. பெண்கள் மாதவிடாய், பிரசவ காலத்தில் தொழுகை போலவே நோன்பும் நோற்கக் கூடாது. இவர்கள் அனைவரும் பின்னாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

நோய் தீர்க்கும் சிறந்த நிவாரணி நோன்பு

நோன்பிருத்தல் என்பது இறையன்பை பெற ஒரு சிறந்த வழி. பசித்திருப்பது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக, ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கிறது என நபிகள் (ஸல்) கூறியுள்ளார்கள். இந்த பேருண்மை அறிவியல், மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோன்பானது நோய்களை குணப்படுத்துவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமலும் தடுக்கிறது. ஆக, மனிதன் ஆன்மிக பலத்தை மட்டுமல்லாது, உடல்நலத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ நோன்பு துணைபுரிகிறது.

‘‘என் சமுதாயத்தினர் ரமலான் நோன்பின் முழு சிறப்புகளையும் அறிந்தால், ஆண்டுமுழுவதும் ரமலானாகவே இருந்துவிட வேண்டும் என்று ஏங்குவார்கள். ஏனென்றால்,அதில்தான் நற்செயல்கள் ஒன்றுதிரட்டப்படுகின்றன. வணக்கங்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. பிரார்த்தனைகள் - துஆக்கள்ஏற்கப்படுகின்றன. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நோன்பாளிகளுக்காக சுவனம் ஆயத்தம் செய்யப்படுகிறது’’ என்று நபிகள் (ஸல்) கூறுவதை கருத்தில் கொண்டு, இந்த புனித ரமலான் மாதத்தை ஈருலகுக்கும் பயனுள்ள விதத்தில் கழிக்க முயற்சிப்போமாக!

கட்டுரையாளர்:

முதல்வர், புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x