Last Updated : 24 Apr, 2020 06:43 PM

 

Published : 24 Apr 2020 06:43 PM
Last Updated : 24 Apr 2020 06:43 PM

ஏழைகளின் வீடுகளுக்கே சென்று உதவும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி; 2,500 குடும்பங்களுக்கு உதவிய ஒரே குடும்பத்தினர்: சிவகங்கையில் மலர்ந்த மனிதநேயம்

கரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே மனிதநேயம் அத்தகையோரின் துயர் துடைத்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மனிதநேயச் சேவைகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் உதவி வருகிறார். மேலும் அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.3.6 லட்சம் வழங்கினார்.

கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலர் வருமானமின்றி உணவிற்காக சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் சண்முகநாதபுரம், பொன்னிவயல், செம்பொன்மாரி உள்ளிட்ட பகுதிகளில் உணவின்றி சிரமப்பட்ட 695 குடும்பங்களுக்கு வீடு, வீடாக சென்று தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

மேலும் அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.3.6 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் வழங்கினார்.

2,500 குடும்பங்களுக்கு உதவிய ஒரே குடும்பத்தினர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் 2,500 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கி ஒரே குடும்பத்தினர் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகின்றனர்.

கல்லலில் ஆ.மு.ஆ. குடும்பத்தினர் ஏழை மக்களுக்காகவே ஓட்டல் தொடங்கி காலை, மதியம் ரூ.10-க்கு உணவு வழங்கி வருகின்றனர். தற்போது ஊரடங்கால் கல்லலில் பலரும் வருமானமின்றி உணவிற்கே சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து ஆ.மு.ஆ. குடும்பத்தினரின் 2,500 குடும்பங்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அவர்கள் 5 கிலோ அரிசி, ஒரு லி., சமையல் எண்ணெய், கடலை பருப்பு, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு தலா அரை கிலோ, சீரகம், சோம்பு, கடுகு தலா 100 கிராம், 50 கிராம் மஞ்சள் தூர், முககவசம் ஒன்று வழங்குகின்றனர்.

விளம்பரத்திற்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத அரசியல் கட்சியினர் மத்தியில், வீடு, வீடாக சென்று டோக்கன் கொடுத்து, முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்து ஆ.மு.ஆ. குடும்பத்தினர் உணவுப்பொருட்களை வழங்கினர். அவர்களது செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x