Published : 23 Apr 2020 05:02 PM
Last Updated : 23 Apr 2020 05:02 PM

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் திரும்பிய 4,777 பேருக்கு கரோனா இல்லை; தனிமைப்படுத்தும் காலம் நிறைவு: ஆட்சியர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 நபர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்பு குழு சிறப்பு அலுவலர் (மதுரை மண்டலம்) சி.காமராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் வியாழக்கிழமை ராமேசுவரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 நபர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கரோனா தொற்று அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 993 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 938 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது. மீதமுள்ள 44 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 11 நபர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதில் பரமக்குடி பகுதியைச் சார்ந்த 2 நபர்கள் குணமடைந்ததை அடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 9 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு சீரான உடல்நிலையில் உள்ளனர்.

அந்தவகையில், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x