Published : 22 Apr 2020 22:48 pm

Updated : 22 Apr 2020 22:48 pm

 

Published : 22 Apr 2020 10:48 PM
Last Updated : 22 Apr 2020 10:48 PM

15-வது நிதிக்குழுவில் தமிழகம் வஞ்சிப்பு: உரிமைக்காக போராடினால் உடன் நிற்க திமுக எம்.பி.க்கள் தயார்: முதல்வருக்கு ஸ்டாலின் உறுதி

the-15th-finance-committee-tamil-nadu-deceiving-dmk-mp-ready-to-fight-rights-stalin-promise-cm

15-வது நிதிக்குழு தனது இறுதி அறிக்கையில், தமிழகத்துக்கு நடந்த துரோகத்தை துடைத்தெறிய மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிட திமுக எம்.பி.க்கள் தயார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:


“மாநிலத்தின் நிதித்தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக - மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

15-வது நிதிக்குழு அமைக்கப்பட்டதிலிருந்தே - மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதிப் பகிர்வினைக் குறைக்கும் விதத்தில் உள்ள “ஆய்வு வரம்புகளை” மாற்றியமைத்திட வேண்டும் என்று நிதிக்குழு முன்பும், மத்திய பாஜக அரசிடமும் எடுத்து வைத்து திமுக வாதாடிப் போராடியது.

பிரதமர் அவர்களுக்கே நான் நேரடியாகக் கடிதம் எழுதி, “2011 மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்வது” உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமையை வஞ்சிக்கும் நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளை நீக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பகிர்வினைச் செய்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

பாஜக ஆட்சியில் இல்லாத பத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி எனது கோரிக்கைக்கு வலுச்சேர்த்தேன். ஆனால் அந்தநேரத்தில் மக்களவையில் 37 உறுப்பினர்கள்- மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் என்று 50 எம்.பி.க்களுடன் மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்த முதல்வர் எடப்பாடி . பழனிசாமி, என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் - எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் - வெறும் கடிதம் எழுதினால் போதும் என்று அமைதி காத்திருந்தார்.

15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பு குறித்து விவாதிக்க கேரள அரசு கூட்டிய தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்தார். இதன் விளைவாக - ஐந்தாண்டுகளுக்கு நிதிப் பகிர்வினை அளிக்க வேண்டிய நிதிக்குழு ஒரேயொரு ஆண்டுக்கு மட்டும் (2020-21) நிதிப் பகிர்வினை அளிக்கும் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்து - மாநில அரசுகளுக்கு மத்திய வரிகளில் இருந்து பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும் குறைத்துவிட்டது.

நிதிப் பகிர்விற்குப் பிறகும் வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில்கூட தமிழ்நாட்டிற்கு வெறும் 4,025 கோடி ரூபாய் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்றதொரு நிதிப்பகிர்வினை 15-வது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை. மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது.

அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 சதவீதத்தின் அடிப்படையில் 7376.73 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு 41.85 சதவீத அடிப்படையில் 19270.4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்களின் உணர்வுகளை அப்பட்டமாக அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிற்குப் போதிய நிதிப் பகிர்வு அளிக்கப்படாததை அதிமுக அரசு ஆரம்பத்தில் ஆணித்தரமாக தட்டிக் கேட்கவும் முன்வரவில்லை. இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்ட பிறகும் - ஏன், அதிமுக ஆட்சியில் ரூ.4.56 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு கடனில் மூழ்கியுள்ள உள்ள இந்த நிலையிலும், குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதற்கு நியாயம் தேடவும் முன்வரவில்லை.
அந்த அளவிற்கு முதல்வர் “நாற்காலி” முக்கியமே தவிர, “நாட்டின் நலன்” முக்கியமல்ல என்று செயல்பட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளனர். அரசுப் பணத்தில், “விளம்பரப் பிரியராக” எப்படித் தோற்றமளிப்பது என்பது மட்டுமே முதல்வரின் இன்றைய விருப்பமாகவும் தலையாய பணியாகவும் இருக்கிறது!

பொறுப்பற்ற அரசும், கடமையை மறந்த முதல்வரும் இருக்கும் விபரீதத்தால், கரோனா நோய்த் தொற்றால் மாநிலமே பேரிடரில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் - மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து முறைப்படி கிடைக்க வேண்டிய அதிகப்படியான நிதிகூட கிடைக்காமல் தமிழகம் நிதியுரிமையைப் பறிகொடுத்து விட்டு நிற்கிறது.

ஆகவே, 15-வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்துள்ள நிதிப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் துரோகமும், அநீதியும் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும் என்று திமுக சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நேரத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வினை மேலும் அதிகரித்து - மத்திய வரி வருவாய்க்கு அதிக அளவில் பங்களிப்புச் செய்யும் தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு கிடைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்கி 15-வது நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை நிலைநிறுத்திட வேண்டும்.
இப்போதாவது தாமதமாகவேனும் விழித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய பாஜக அரசுக்கு கொடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வருக்கு வழங்கிட திமுக எம்.பி.க்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!


The 15th Finance CommitteeTamil NaduDeceivingDMKMPReady to fightRightsStalinPromiseCMCorona tn15 வது நிதிக்குழுதமிழகம் வஞ்சிப்புஉரிமைக்காக போராட்டம்உடன் நிற்பதுதிமுக எம்.பி.க்கள்தயார்முதல்ர்ஸ்டாலின்உறுதிகரோனாகொரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x