Published : 21 Apr 2020 01:58 PM
Last Updated : 21 Apr 2020 01:58 PM

மருத்துவர்கள், பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை; தமிழக அரசு உங்களின் பக்கம் முழுமையாக நிற்கும்: முதல்வர் பழனிசாமி உறுதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழக அரசு அவர்களின் பக்கம் முழுமையாக நிற்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.21) வெளியிட்ட அறிக்கையில், "மனித குலத்திற்கே சவாலாக இருந்து வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே மறந்து, தன்னலம் கருதாமல் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு உயிரும் இந்த அரசுக்கு முக்கியம் என்று கருதி, இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, களத்தில் முன்னின்று பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை நான் ஏற்கெனவே அறிவித்து இருந்தேன். இவர்களது பணியினை நாடே போற்றி, நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்களை, இறைவனுக்கு நிகராக நான் கருதுகின்றேன்.

கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துதான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், மருத்துவப் பணியில் ஈடுபட்டு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கின்றது.

அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தன்னலம் கருதாமல், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு, தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழக அரசு உங்கள் பக்கம் முழுமையாக நிற்கும் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x