Published : 19 Apr 2020 07:40 PM
Last Updated : 19 Apr 2020 07:40 PM

ஊரடங்கு: வறுமையில் வாடும் மக்களுக்கு அரசுப் பள்ளி சத்துணவு மையங்களில் உணவு சமைத்துக் கொடுக்கப்படுமா?

சத்துணவு மையங்களில் 100 முதல் 500 பேருக்கு உணவு சமைக்கக்கூடிய வகையில் வசதிகள் உள்ளதால் அரசு மற்றும் தனியார் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆசிரியர் முகநூலில் கூறிய கருத்துக்கு சமூக வலைதளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஊரடங்கு காரணமாக தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் சத்துணவு சமைத்துக் கொடுப்பதற்கு சத்துணவுக்கூடம் செயல்படுகிறது. இந்தச் சத்துணவுக் கூடங்கள் தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் செயல்படாமல் உள்ளன.

எந்த நேரத்திலும் இந்தச் சத்துணவுக்கூடத்தை திறந்து உணவு சமைத்து வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது கரோனா ஊரடங்கால் கூலி வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாரத்தை இழந்து வறுமையில் வாடும் அடித்தட்டு மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் இந்தப் பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களைப் பயன்படுத்தி தன்னார்வலர்கள் அல்லது அரசே உணவு சமைத்து வழங்கலாம் என தன்னுடைய முகநூல் பக்கத்தில் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தா.காட்வின் யோசனை தெரிவித்துள்ளார்.

அவரது இந்த யோசனை இந்த நெருக்கடியான காலத்தில் ஆதரவற்றவர்கள், பசியால் வாடும் வறியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சமூக வலைதளவாசிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து தா.காட்வின் கூறுகையில், "தமிழகத்தில் சுமார் 34 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் 100 முதல் 500 பேருக்கு உணவு சமைக்கக்கூடிய வகையில் சமையல் அறை, அதற்கான பாத்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஆனால், கிராமங்களில் நிலைமை அப்படியில்லை. அவர்களில் பல குடும்பங்கள் வாய்விட்டுக் கேட்க முடியாமல் அரசு கொடுத்த நிவாரணமும் போதாமல் பசியால் வாடுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் சார்பில் இக்கால சூழ்நிலையில் கஷ்டப்படுகிறவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைத்துக் கொடுக்கலாம். இதற்கு தன்னார்வலர்கள் முன் வரும்பட்சத்தில் அரசு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது அரசே கிராமங்கள்தோறும் உள்ள பள்ளிகளில் உணவு சமைத்து கிராம மக்களுக்கு வழங்கலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x