Last Updated : 19 Apr, 2020 06:12 PM

 

Published : 19 Apr 2020 06:12 PM
Last Updated : 19 Apr 2020 06:12 PM

ஊரடங்கு உத்தரவை மீறித் திறந்ததால் தென்காசி அருகே ஜவுளிக்கடைக்கு ‘சீல்’

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் கணபதி சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையில், கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவை மீறி, பின்புற வாசல் வழியாக வாடிக்கையாளர்களை வரவழைத்து வியாபாரம் செய்யப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல் காதர், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், சங்கரன்கோவில் டவுன் உதவி ஆய்வாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் அந்த ஜவுளிக் கடைக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, பின்புற வாசல் வழியாக வாடிக்கையாளர்களை வரவழைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடைக்குள் இருந்துள்ளனர். இதையடுத்து, வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், கடையில் இருந்த விற்பனை செய்யப்பட்ட பில்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கரன்கோவில் கோட்டாச்சியர் முருகசெல்வி, 144 தடை உத்தரவை மீறி கடையில் விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சங்கரன்கோவில் காவல்துறைக்கு உத்தரவிட்டார். அரசின் தடை உத்தரவை மீறிச் செயல்படும் கடைகள் பற்றி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் எனவும் அந்தக் கடைகள் மறு உத்தரவு வரும் வரை சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x