Published : 18 Apr 2020 10:22 PM
Last Updated : 18 Apr 2020 10:22 PM

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு; விவரங்கள் சேகரிக்கப்படுகிறது- கடும் நடவடிக்கை: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

ஊரடங்கு உள்ள நேரத்தில் குடும்ப வன்முறை, குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாச கானொலிகளை பதிவிறக்கம் செய்து பார்த்து பரப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை வரும் என, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.

குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாசப்படங்களை பார்ப்பது, தரவிறக்கம் செய்வது, பரப்புவது, சேமித்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய தளங்களில் சென்று தேடுவதும் குற்றமாகும். இத்தகைய நபர்களின் ஐபி முகவரி அமெரிக்க உளவு அமைப்பால் சேகரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழக கூடுதல் டிஜிபி ரவி வசம் அத்தகைய தகவல்கள் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக லிஸ்ட் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்றுக்காக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் ஆபாச வலைதளம் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது, குடும்ப வன்முறையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு ஆபாச வலைதளங்களை பார்ப்போரில் குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாச வலைதளங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது. அவர்களது விவரங்களை சைபர் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அளித்துள்ள பேட்டி:

“ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்யக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 25 போன் கால்கள் வருகின்றன எங்களுக்கு. அதில் இதுவரை 9 பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். மற்ற பல பிரச்சினைகள் ஆலோசனை அறிவுரை மூலமும் தீர்த்து வைத்துள்ளோம்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. அது ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாசப்படங்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதாக புள்ளிவிவரம் வந்துள்ளது.
இது சம்பந்தமாக எங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். எனவே குழந்தைகள் சம்பந்தமான ஆபாசப் காணொலிகளை பதிவிறக்கம் செய்து பார்த்து, பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே ஆபாசப்படம் பார்ப்பதையோ, குடும்ப வன்முறையில் ஈடுபடுவதையோ செய்யவேண்டாம்.இந்த நேரத்தில் அரசு சொல்கின்ற அனைத்து ஆலோசனைகளைக் கேட்டு அமைதியாக குடும்பத்துடன் இருக்கவேண்டும். ஆபாசப்படம் பார்ப்பதோ, குடும்ப வன்முறையில் ஈடுபடுவதோ குற்றம். இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் 181, 1091, 100, 102 இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டால் அடுத்த நிமிடமே உங்களுக்கான உதவி கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x