Published : 17 Apr 2020 05:58 PM
Last Updated : 17 Apr 2020 05:58 PM

ஆதரவற்ற விலங்குகள், தெருநாய்களுக்கு உணவு; மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு

வீதிகளில் ஆதரவின்றித் திரியும் நாயினங்கள், கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், உணவு வழங்கவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று தமிழ்நாட்டில் தீவிரமாகாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதன. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களின் நன்மை கருதி போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது.

மாநிலம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியவாசியத் தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும், கால்நடை, கோழி, முட்டை, இறைச்சி, கால்நடை மற்றும் கோழித்தீவனம் ,கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டது.

மேலும் வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள், மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியனவற்றுக்கு விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கு உணவு வழங்கவும் ஏதுவாக தகுந்த அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேணுதல் குறித்த தகவல்களை உடனுக்குடன் கவனிக்க கால்நடை பராமரிப்புத் துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களிள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் SPCA, கால்நடை பராமரிப்புத்துறை தமிழ்நாடு விலங்குகள் நலவரியம் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் மூலம் ஆதரவின்றித் திரியும் கால்நடைகளுக்கு உணவளித்து பேணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லி சாலையில் ரிப்பன் மாளிகை எதிரிலுள்ள குதிரை லாயத்தில் முழு அடைப்பினால் குதிரை உல்லாச நடை, கல்யாணத் திருவிழா போன்ற நிகழ்ச்சி நடைபெறாததால் உணவு மற்றும் ஆதரவின்றி அல்லலுறும் தொழிலாளர் மற்றும் அவர்தம் குதிரைகளின் நிலையினை கருத்திற்கொண்டு அவற்றிற்குப் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிக்காக உதவி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விலங்குகள் நலவரியம் மூலம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத்துறையின் அரசு முதன்மைச் செயலாளரின் வழிகாட்டுதலின்படி 525 கிலோ குதிரை தீவனம் ஏப்.16 அன்று வழங்கப்பட்டது. மேலும் குதிரை சவாரி தொழிலாளர்களின் நிலையறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மூட்டை வீதம் 15 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது”.

இவ்வாறு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x