Published : 17 Apr 2020 04:01 PM
Last Updated : 17 Apr 2020 04:01 PM

ஊரடங்கை மீறி சேலம் செல்லலாமா? ஊருக்கு மட்டும்தான் உபதேசமா? - முதல்வருக்கு முத்தரசன் கேள்வி

ஊருக்கு உபதேசம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவற்றை முதலில் அவரது செயலில் கடைப்பிடிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.17) வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். இது அரசின் ஊரடங்கு சட்டத்தையும், கோவிட்-19 நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறிய செயல் அல்லவா?

கடந்த 15 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்திய காவல்துறை சேலத்தில் கூடிய பெரிய கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை?

முதல்வர் என்பவர் அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களுக்கும் மேலானவரா? அவர் என்ன தனது பராக்கிரமச் செயலால் படை நடத்தி வென்று, அதிகாரத்தில் உள்ள சர்வாதிகாரியா?அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் விசாலமான கலைஞர் அரங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் 11 பேர் கூடுவதால் கோவிட்-19 நோய் தொற்று பரவி விடும் என பரபரப்பாக்கி தடை செய்து, காணொலி மாநாடு வழியாக கூட்டம் நடத்தச் சொன்னவர்கள் எங்கே போனார்கள்?

நேற்று தலைமைச் செயலகத்தில் அமர்ந்து காணொலி மாநாடு வழியாக நீண்ட நேரம் மாவட்ட ஆட்சியர்களோடு கலந்தாலோசனை நடத்திய முதல்வர் அடுத்த நாளில் சேலத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அலுவர்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு என்ன தேசிய நெருக்கடி ஏற்பட்டது?

ஜனநாயக அரசியலமைப்பில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை ஒடுக்கி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களுக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என்பது முதல்வருக்குத் தெரிந்தே நடக்கும் உரிமை மீறல் செயலாகும்.

ஆளும் கட்சி என்ற தோரணையில், அரசின் ஆய்வுக் கூட்டங்களை அதிமுக அரசியல் பிரச்சார மேடையாக்கி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது .

ஊருக்கு உபதேசம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவற்றை முதலில் அவரது செயலில், கடைப்பிடிக்க வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x