Published : 16 Apr 2020 07:09 AM
Last Updated : 16 Apr 2020 07:09 AM

ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர், ஓய்வூதியர்களுக்கு உணவுப் பொருள் தொகுப்பு விநியோகம்: தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் தொடங்கி வைத்தார்

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் தொகுப்பை தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் நேற்று வழங்கினர். உடன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அ.யாஸ்மின் பேகம் உள்ளிட்டோர்.

சென்னை

கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர்கள், ஓய்வூதியர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் அடங்கிய தொகுப்பை தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் நேற்று வழங்கினார்.

தமிழகத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 13 ஆயிரத்து 882கட்டுமானத் தொழிலாளர்களுக் கும், 83 ஆயிரத்து 500 அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட இதர நலவாரியங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொருவருக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய பை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரத்து 277 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி,நுங்கம்பாக்கம் லேக் ஏரியா முதல்தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் நேற்று நடைபெற்றது.

தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் தொழிலாளர் களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந் நிகழ்ச்சியில், சென்னைமாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட் சுமி, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அ.யாஸ்மின் பேகம், இணைஆணையர்-1 பா.மாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர்கள் உணவுப்பொருட்கள் தொகுப்பை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x