Published : 14 Apr 2020 01:14 PM
Last Updated : 14 Apr 2020 01:14 PM

ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாய தர்மம் 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?- ஸ்டாலின் கேள்வி

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம் பிரதமருக்குப் புரியவில்லையா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது கட்டமாக, மே 3-ம் நாள் வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

நோய்த் தொற்று உள்ளவர்களை முற்றிலுமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்துள்ளது. ஏழு வகையான அறிவுரைகளையும் மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், நாட்டு மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல; மக்கள் உயிர்வாழ்வதற்கான நிவாரண உதவிகள், பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளிலும் இல்லை; இன்றைய உரையிலும் இல்லை!

மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் என்பதன் முழுமையான பொருள், சமூகமே முடக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான்.

முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப் போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப் போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே!

கரோனா தொற்றில் இருந்து தங்களை மக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். அத்தகைய மக்களை, பொருளாதார ரீதியாகப் பாதுகாக்க மத்திய அரசு தனது திட்டங்களை உரிய காலத்தில் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டுமே!

வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், பலவீனமும், சமூக ஏற்றத் தாழ்வும், சாதியப் புறக்கணிப்பும் உள்ள இந்தியச் சமூகத்தில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர், அன்றாட வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களது வாழ்க்கை, இந்த ஊரடங்கால், மொத்தமாகச் சிதைந்துவிட்டதே, அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியப் பிரதமர் செய்யப் போகும் உதவிகள் என்ன?

அத்தகைய லட்சோபலட்சம் இந்தியக் குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டாமா?

சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால் அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம், முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது; அதனால் அவர்களால் நிம்மதியாக வீட்டுக்குள் இருந்திட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கி இருக்க வேண்டும்.

"மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம்; இந்த 30 லட்சம் கோடியில் ரூ.65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா?" என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?

தமிழக அரசு கேட்ட நிதியைத் தரவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்களது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து; மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் மருந்துகள், அவர்களைக் காக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோயைக் கண்டறியும் கருவிகள், இவற்றை மாநிலங்களுக்கு எப்போதுதான் தரப்போகிறீர்கள் என்பதே, இப்போது மக்கள் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள், உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள்!

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்பதுதான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x