Last Updated : 18 Aug, 2015 10:18 AM

 

Published : 18 Aug 2015 10:18 AM
Last Updated : 18 Aug 2015 10:18 AM

தாம்பரம் முதல் வடசேரி வரை... மண்ணை மீட்டெடுக்க மாபெரும் முயற்சி

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் மது, வறட்சி, அரசுப் பள்ளிகள் மூடல் ஆகிய 3 முக்கியப் பிரச்சினைகளின் தீர்வுக்கான முன்மாதிரியாக உள்ளது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராமம்.

இந்த மாற்றத்துக்கு வித்திட்டவர் தாம்பரம் நாராயணன். சென்னையில் கட்டுமானத் தொழில் நிறுவனம் நடத்திவருகிறார்.

வடசேரி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாராயணன் ‘தி இந்து’விடம் கூறியது: வறட்சியால் எங்கள் கிராமத்தினர் சென்னைக்கு குடிபெயர்ந்தாலும், அங்கு தனி அடையாளங்களைப் பதித்துள்ளனர். எனது தந்தை சென்னை ரயில்வேயில் பணிபுரிந்ததால், நான் இங்கேயே படித்து, தொழில் அமைத்துக் கொண்டேன். எனினும், வாய்ப்பு கிடைக்கும்போது சொந்த ஊருக்கு வருவோம்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வடசேரி வந்தபோது, சாலையை அகலப்படுத்தவும், மின் விநியோகத்துக் காகவும் அத்தனை மரங்களையும் வெட்டியிருந்தனர். காவிரி டெல்டாவில் இருந்தாலும், வடசேரி மட்டும் வானம் பார்த்த பூமிதான். பக்கத்து ஊரில் ஆறு ஓடினா லும், மேடான பகுதியான எங்கள் ஊரில் தண்ணீர் பாயாது.

தஞ்சை மாவட்டத்திலேயே அதிகமான ஆழ் குழாய்க் கிணறுகள் இங்குதான் உள்ளன. சுமார் 600 ஆழ்குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது.

இந்த நிலையை மாற்ற முடிவு செய்தேன். மரங் களை வளர்க்க ஊராட்சித் தலைவரை அணுகியபோது, ‘நிதி இல்லை’ என்று கைவிரித்து விட்டார். இதைய டுத்து உருவானதுதான் ‘வடசேரி பசுமை இயக்கம்’.

சென்னையிலிருந்து வந்த வனத்துறை தலைமை அலுவலர் ஊரின் நிலைமையைப் பார்த்து 600 மரக் கன்றுகளை வழங்கினார். மேலும், 400 மரக்கன்றுகளை விலைக்கு வாங்கினோம். ஒரு கூண்டு ரூ.600 என்ற விலையில் 1,000 கூண்டுகளை சொந்த செலவில் தயார் செய்தோம். மரங்களின் முக்கியத்துவம் குறித்து ஊர்வலம், கூட்டங்கள் நடத்திய பின்னர், ஒரு குழுவை அமைத்து மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங் கினோம். அவற்றுக்குத் தண்ணீர் ஊற்ற வாகனங் களும், தொட்டிகளும் வாங்கினோம்.

கடந்த 5 ஆண்டுகளில் 2,200 மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தோம். இவற்றில் ஆயிரம் கன்றுகள் மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. இதற்கு மட்டும் ரூ.8 லட்சம் செலவாகி யுள்ளது. இதனால் வடசேரியில் மழை வளமும் அதிகரித்துள்ளது. சாலையோரம் இடமில்லாததால், பழ மரக்கன்றுகளை வாங்கி ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் கிராம மக்களுக்கு வழங்குகிறோம்.

பள்ளி மேம்பாடு…

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றபோது, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பிளஸ் 2 வகுப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ள நிலையை விளக்கினர். இதை மாற்ற, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்தோம். மின் பற்றாக்குறையைப் போக்க ரூ.50,000 மதிப்பில் இன்வெர்ட்டர் வாங்கினோம்.

தொடர்ந்து, தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர், கதவு அமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், ஆசிரியர் நியமனம், மாலை நேர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு சுண்டல், உப்புமா வழங்குதல் என பல்வேறு பணிகளில் ஈடு பட்டோம். இந்த முயற்சியால் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 17 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர். பிளஸ் 2-வில் 1,000 மதிப் பெண்ணுக்குமேல் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

ஆண்டுதோறும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கப் படுமென அறிவித்தோம். அதன்படி, முதலாமாண்டு விழாவை நடத்தி, தங்க நாணயங்களை வழங்கினோம். அடுத்த ஆண்டு, பொது இடத்தில் விழா நடத்தி, மாணவர்களுடன், ஆசிரியர்களையும் பாராட்டி பரிசு வழங்கினோம். தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த முயற்சிக்கு அறிவியல் ஆசிரியர் மனோ கரன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் முத்து ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் ரமேஷ், பள்ளி வளர்ச்சிக் குழுச் செயலாளர் ராமநாதன் ஆகியோரும் பெரிதும் உதவியுள்ளனர். எனது தாயார் திரிபுரசுந்தரி, தந்தை குருசாமி பெயரில் அமைந்த அறக்கட்டளை சார்பில் தங்க நாணயங்கள், பரிசுகளை வழங்கி வருகிறோம்.

இந்த மாற்றத்தை மேலும் முன்னெடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 1 கோடி மரம் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் விவேக்கை, வடசேரியில் சுதந்திர தினத்தன்று நடந்த முப்பெரும் விழாவுக்கு அழைத்தோம். அவரது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றார் நாராயணன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வடசேரியில் அயல்நாட்டு வகை மதுபான உற்பத்தி ஆலை தொடங்க முயன்றபோது, அதற்கு எதிராக இயக்கம் நடத்தியவர் தாம்பரம் நாராயணன். அவரது, ‘வடசேரி மக்கள் நலச் சங்கத்தின்’ போராட்டங்களால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x