Last Updated : 13 Aug, 2015 08:30 AM

 

Published : 13 Aug 2015 08:30 AM
Last Updated : 13 Aug 2015 08:30 AM

ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் அபராதம் செலுத்த ஒரு மாதமாக காத்திருப்பு: நடமாடும் நீதிமன்றங்களை அதிகரிக்க கோரிக்கை

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டு அபராதம் கட்டுவதற்காக ஒரு மாதமாக காத்திருக்கிறோம் என்று வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் பிடிபடுபவர்களிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த ஆவணங்கள் இல்லாதவர்களிடம் வாகனம் பறிமுதல் செய்யப்படும். புதிய ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீது, ரூ.100 அபராதம் ஆகியவற்றை செலுத்திய பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங் கள் திருப்பி கொடுக்கப்படும்.

ஹெல்மெட் வழக்குகளை நடமாடும் நீதிமன்றங்கள் மட்டுமே விசாரித்து வருகின்றன. சென்னை அண்ணா சாலை எல்ஐசி பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலையில் நடமாடும் நீதிமன்றம் மூலம் ஹெல்மெட் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அபராதம் வசூலித்து, ஆவணங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

எழும்பூரைச் சேர்ந்த சையது கூறும் போது, "கடந்த 24-ம் தேதி நான் பிடிபட் டேன். எனது ஓட்டுநர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொண்டனர். அதை வாங்கு வதற்காக 4 முறை அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு சென்று வந்தேன். ஆனால் நடமாடும் நீதிமன்றம் இந்த பகுதிக்கு எப்போது வருகிறதோ அதன் பின்னர்தான் வழக்குகள் விசாரிக்கப்பட்டு ஆவணங்கள் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டனர். இன்று (நேற்று) 2 மணிக்கு வரச்சொன்னார்கள். நான் ஓட்டுநர் என்பதால் பாதி நாள் எல்லாம் விடுப்பு எடுக்க முடியாது. எனவே முழு நாளும் லீவு போட்டுவிட்டு வந்திருக்கிறேன். 2 மணிக்கு முன்பே வந்து விட்டேன். இப்போது மணி 5.50. இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை" என்றார்.

இசக்கி, ராஜகோபாலன், சங்கர், சுவாமி நாதன் மற்றும் சிலர் கூறும்போது, "ஹெல் மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியது தவறு தான். அதற்காக நாங்கள் அபராதம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் அதற் கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். அசல் ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு ஒரு மாதமாக காலம் கடத்துவதால் பல பிரச்சினைகளை சந்திக்கிறோம். எங்களில் பலருக்கு ஓட்டுநர் உரிமம்தான் அடையாள அட்டை மாதிரி. இது இல்லாமல் எங்களால் ரயில் பயணம் கூட செய்ய முடிவதில்லை.

எனவே, பிடிபடும் இடத்திலேயே அல்லது ஓரிரு நாட்களில் அபராதம் செலுத்தி ஆவணங்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஆவணங்கள் பறிமுதல் என்ற முறை யையே நீக்க வேண்டும்" என்றனர்.

போக்குவரத்து போலீஸார் கூறும் போது, "சென்னை போக்குவரத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 மண்டலங்கள் உள்ளன. தினமும் சுமார் 500 முதல் 700 வரை ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் இவை அனைத்துக்கும் சேர்த்து 2 நடமாடும் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன. இந்த நீதிமன்றங்கள் எங்கள் பகுதிக்கு எப்போது வருகிறதோ அதுவரை ஹெல்மெட் வழக்குகளில் சிக்கியவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

இந்த இடத்தில் இன்று (நேற்று) அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம், ஜாம்பஜார், மெரினா, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் ஆகிய 7 காவல் நிலைய பகுதிகளில் பிடிபட்ட ஹெல்மெட் வழக்குகள் விசாரிக்கப்படு கின்றன. இதனால்தான் இவ்வளவு கூட்டம்.

நடமாடும் நீதிமன்றங்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். வாகன ஓட்டிகளிடம் பறிமுதல் செய்யப்படும் ஆவணங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாப்பது எங்களுக்கும் சிரமமாக இருக்கிறது" என்றனர்.

“கடைகளில் ரூ.100 கொடுத்தால் நாம் கூறும் தேதியில் புது ஹெல்மெட் வாங்கி யது போல ரசீது கொடுக்கின்றனர். என்னிடம் ஏற்கெனவே ஹெல்மெட் உள்ளது. அதை எடுத்து வந்திருக்கிறேன்” என்று பல வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x