Published : 13 Apr 2020 01:14 PM
Last Updated : 13 Apr 2020 01:14 PM

சென்னையில் தடை உத்தரவை மீறித் திரிந்த  8 எத்தியோப்பியர்கள் கைது: தொற்றுப் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

எத்தியோப்பியாவிலிருந்து டெல்லி வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து தங்கியிருந்த 8 எத்தியோப்பியர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பேரிடர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

டெல்லி மாநாட்டுக்குப் பின் அங்கு சென்று வந்தவர்களைக் கண்காணிக்கும் பணி தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநாட்டுக்குப் பின் தமிழகத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டெல்லி சென்று திரும்பியவர்கள் ஆங்காங்கே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதேபோன்று டெல்லி மாநாட்டுக்கு எத்தியோப்பியாவிலிருந்து வந்த 8 பேர், அங்கிருந்து கடந்த 3-ம் தேதி தமிழகம் வந்துள்ளனர்.

சென்னை வந்த அவர்கள் முத்தையால் பேட்டையில் தங்கியிருந்தது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தடை உத்தரவை மீறி வெளியாட்களுக்குத் தொற்று நோய் பரப்பும் வண்ணம் அஜாக்கிரதையாக சுற்றித் திரிந்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். 8 பேரும் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த மதப் பிரச்சாரம் செய்தது தொடர்பாக மேற்கண்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு கரோனோ நோய்த் தொற்று பாதிப்பு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.

இந்நிலையில் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்து மதப் பிரச்சாரம் செய்து வந்த 8 பேரையும் கைது செய்த போலீஸார், s 188, 269, 270, 271 IPC and Sec 3 of Epidemics diseases act 1987 and 134 & 135 of Public Helth Act 1939 and 13 & 14 of Foreigners Act -ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x