Last Updated : 11 Apr, 2020 06:59 AM

 

Published : 11 Apr 2020 06:59 AM
Last Updated : 11 Apr 2020 06:59 AM

கரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை கைகொடுக்குமா?

இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் கரோனா வைரஸ் நோய்க்கு ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற நிலைதான் உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் (Hydroxychloroquine) எனும் மலேரியா மாத்திரையை அமெரிக்காவுக்கு அனுப்பச் சொல்லி இந்தியாவுக்கு மிரட்டல் விட்டதும் அந்த மருந்துக்கு இப்போது மவுசு கூடிவிட்டது. அத்துடன் அசித்ரோமைஸின் மாத்திரையையும் சாப்பிடலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் சொன்னதும் அதையும் பதுக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது ‘பிளாஸ்மா சிகிச்சை’ (Convalescent Plasma therapy) பலன் தருகிறது என்ற செய்தி, ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்த ஒரு மருத்துவப் பார்வை இது.

‘பிளாஸ்மா’ என்பது என்ன?

நம் ரத்தத்தில் பிளாஸ்மா என்பது திரவம். இது 60% உள்ளது. ரத்த செல்கள் (திடம்) 40% உள்ளன. கரோனாவைப் பொறுத்த அளவில் ரத்த வெள்ளை அணுக்கள் முக்கியமானவை. இவற்றில் நியூட்ரோபில்கள், லிம்போசைட்டுகள், மோனோசைட்டுகள் என பலதரப்பட்ட செல்களும் B செல்கள், T செல்கள் எனபல பிரிவுகளும் உள்ளன. இவைதான் நோய்க் கிருமிகளுடன் போராடும் செல்கள்; நம் தடுப்பாற்றல் மண்டலத்துக்கு உயிர் கொடுக்கும் செல்கள் ஆகும்.

தடுப்பாற்றல் மண்டலம் எப்படி வேலை செய்கிறது?

உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தை நாட்டின் ராணுவப்படையுடன் ஒப்பிட்டு கூறினால் உங்களுக்கு எளிதில் புரியும். ராணுவத்தில் தளபதிகள், சிப்பாய்கள், ஒற்றர்கள் என்று இருப்பதைப்போல வெள்ளை அணுக்களிலும் பலவகை உண்டு.

முக்கியமானதைச் சொல்ல வேண்டுமானால், B செல்கள், T செல்கள். இவைதாம் உடலின் ராணுவத் தளபதிகள். இவர்களில் B தளபதிக்குக் கீழ் IgG, IgM எனும் சிப்பாய்கள் இருக்கிறார்கள். ‘ஆன்டிபாடிகள்’ என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள்தான். T தளபதிக்கு Helper செல்கள், Killer செல்கள் எனும்சிப்பாய்கள் இருக்கிறார்கள். Helperசெல்கள் ஒற்றர்கள்போல் செயல்படுகிறார்கள். இவர்களுடன் நினைவு செல்களும் (Memory cells), மேக்ரோபேஜ் (Macrophage) எனும் துப்புரவுப் பணியாளர்களும் உள்ளனர்.

உடலுக்குள் ‘கிருமி’ எனும் அந்நியன் நுழையும்போது நினைவு செல்கள் அதைக் கவனிக்கும். ஏற்கெனவே உடலுக்கு அறிமுகமாகி ஆபத்து இல்லாதது என்றால் உள்ளே நுழையவிடும். இல்லை, இது புதுமுகம்/அந்நியன்/எதிரி என்று தெரிந்தால் B தளபதிக்கு தகவல் அனுப்பிவிடும். உடனே B தளபதி IgG, IgM (ஆன்டிபாடிகள்) சிப்பாய்களை அனுப்பி அந்தக் கிருமிக்கு எதிராகப் போராடுவார். அந்நியர்கள் எண்ணிக்கையில் அதிகமென்றால், ஒற்றர்கள் (Helper செல்கள்) உதவிக்கு வருவார்கள். இந்த அந்நியக் கூட்டத்தை அழிக்க எத்தனை சிப்பாய்கள் வரை தேவைப்படும் என்று கணக்கு சொல்லுவார்கள். B தளபதி அந்த அளவுக்கு ‘ஆன்டிபாடி’ சிப்பாய்களை அனுப்பிவைப்பார். இந்தத் தகவல் T தளபதிக்கும் தெரிவிக்கப்படும். இவர் Killer செல்கள்எனும் ‘கமோன்டோ’க்களை களத்துக்குஅனுப்புவார். இவர்கள் அந்தக் கிருமிகளைத் துவம்சம் செய்துவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்ட கிருமிகளை அங்கேயே விட்டுவைத்தால் ஆபத்துஎன்று கருதி இரண்டு தளபதிகளும் ‘மேக்ரோபேஜ்’களை அங்கு அனுப்புவார்கள். இவர்கள் இறந்துகிடக்கும் கிருமிகளை விழுங்கி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். ஆக, கிருமி காலி! கரோனா விஷயத்திலும் இதுதான் நடக்கிறது.

சமயங்களில் போரில் தோல்வியைத் தழுவும்போது தளபதிகள் நாட்டுத் தலைவர்களுக்கு அதை சூட்சுமமாகத் தெரிவித்து, அடுத்த நாட்டுப் படையைத் துணைக்கு அனுப்பச்சொல்லி இரண்டாம்கட்ட போரில் ஜெயிப்பார்கள். அதேபோலத்தான், உடலுக்குள் தற்காப்பு மண்டலம் இத்தனை போராடியும் கரோனாவைக் கொல்ல முடியவில்லை எனும்போது, நம் உடலில் சில அலாரங்களை அடிக்கும். அவைதான் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல். உடனே மருத்துவரிடம் போகிறோம். அவர் கொடுக்கும் சிகிச்சையில் மறுபடியும் நம் உடலில் போதுமான ஆன்டிபாடிகள் உற்பத்தியாகிவிடும். இந்த இரண்டாம் கட்டப் போராட்டத்தில் நோய்க் கிருமி அழிந்துவிடும். நோய் குணமாகிவிடும்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது என்ன? இது புதிய சிகிச்சையா?

ரத்தம் குறைந்தவர்களுக்கு ரத்தக்கொடையாளர் மூலம் ரத்தம் பெற்றுசெலுத்துகிறோம் அல்லவா? அதுமாதிரிதான் இதுவும். கரோனா வந்து குணமானவரின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்து எடுத்து கரோனா நோயாளிக்குக் கொடுப்பது பிளாஸ்மா சிகிச்சை. இது புதிய சிகிச்சை அல்ல. ஏற்கெனவே சார்ஸ், மெர்ஸ், பன்றிக்காய்ச்சல் போன்றவை பெருந்தொற்றாகப் பரவியபோதும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது எப்படி வேலை செய்கிறது?

ஏற்கெனவே சொன்னதுபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ‘ரத்தக்கள’த்தில் ஒரு ‘குருஷேத்திர போர்’நடந்திருக்கும் அல்லவா? அப்போதுஅவருடைய ரத்தத்தில் கரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உற்பத்தியான தால்தான் அவர் குணமாகி இருக்கிறார். ஆகவே அவருடைய ரத்த பிளாஸ்மாவில் கரோனாவைக் கொல்லும் அளவுக்கு ஆன்டிபாடிகள் இருக்கும்.

இப்போது புதிதாக ஒரு கரோனாநோயாளி வருகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்குப் போதிய ஆன்டிபாடிகள் இல்லை என்பதால்தான் கரோனா பாதித்து உள்ளது. இவருக்கு கரோனாவில் மீண்டெழுந்தவரின் பிளாஸ்மாவைச் செலுத்த வேண்டும். அப்போது புதிதாகச் செலுத்தப்பட்ட பிளாஸ்மாவின் ஆன்டிபாடிகள் அவருடைய உடலுக்குள் சென்றதும் அங்குள்ள கரோனா கிருமிகளை ‘எதிரிகள்’ என அடையாளப்படுத்திவிடும். உடனே ‘போர்’ தொடங்கிவிடும். ஏற்கெனவே அவர் உடலில் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆன்டிபாடிகளுடன் இணைந்து புதிய உத்வேகத்துடன் போரிட்டு ஜெயிக்கும். அவர் குணமடைவார். இதுதான் பிளாஸ்மா சிகிச்சையின் பலன்.

இந்த சிகிச்சையை கரோனாவுக்கு முதன்மை சிகிச்சையாக உலக சுகாதாரநிறுவனம் இன்னும் ஏன் பரிந்துரைக்க வில்லை? எதற்கு யோசிக்கிறது?

இந்த சிகிச்சை இப்போதும் சோதனைக் கட்டத்தில்தான் இருக்கிறது. சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் இதை மேற்கொண்டதில் பலரும் குணமாகியுள்ளனர். எனவே, இதை கரோனாவுக்கான சிகிச்சையாக எடுத்துக்கொள்ளலாம் என்று அந்த நாடுகள் பரிந்துரைக்கின்றன. ஆனாலும்,இந்நாடுகள்கூட மிகவும் மோசமான நிலையில் இருந்த கரோனா நோயாளிகளுக்கே இதைக் கொடுத்துப் பார்த்துகுணம் கண்டிருக்கின்றன. மற்றவர் களுக்குக் கொடுத்துப் பார்க்கவில்லை.

இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். பிளாஸ்மா சிகிச்சையால் குணமான நோயாளிகளுக்கு மற்ற வைரஸ் மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அவற்றாலும் குணமாகியிருக்கலாம் அல்லவா? இது ஒரு யோசனை. அடுத்தது, ஒருவருக்கு கரோனா குணமான இரண்டாம் வாரத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு பிளாஸ்மாவைப் பெறுகிறார்கள். அப்போது அந்த ரத்தத்தில் கரோனா கிருமிகளும் குறைந்த அளவில் இருக்க வாய்ப்புண்டு. அவற்றை முழுவதுமாக நீக்கிவிட்டு அடுத்தவருக்குக் கொடுத்தால்தான் கரோனா குணமாகும். இப்படிக் கிருமியை நீக்குவதிலும் சிரமங்கள் உள்ளன. ஆக, கிருமிகளுடன் பிளாஸ்மாவை செலுத்திவிட்டால் கரோனா பாதிப்பு மிகவும் மோசமாகிவிடும். இது இரண்டாவது யோசனை.

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சிகிச்சைக்கு இன்னும் முன்னுரிமை கொடுக்கவில்லை. இனிமேல் வழங்கப்படலாம் என்று இந்திய மருத்துவத் துறை எதிர்பார்க்கிறது.

ஒருவரிடமிருந்து பிளாஸ்மா பெற்றால் அதை இரண்டு பேருக்கு கொடுக்க முடியும். ஒரு கரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை ஒருமுறை கொடுத்தால் போதும். 200 மி.லி. என்பது ஒரு டோஸ்.

பிளாஸ்மா சிகிச்சை பெற்று குணமானவருக்கு மீண்டும் கரோனா தாக்காது என்கிறார்களே, உண்மையா என்றால் அதற்கு இதுவரை ஆதாரமில்லை. ஆனாலும், கரோனா குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களில் கற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது கரோனா வைரஸ் வந்து குணமானவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்து விடுவதால், மறுபடியும் இது பாதிக்காது என்றே வைரஸ் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கட்டுரையாளர்,பொதுநல மருத்துவர்,தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x