Published : 10 Apr 2020 06:05 PM
Last Updated : 10 Apr 2020 06:05 PM

ஊரடங்கில் குடும்ப வன்முறை செய்த 6 பேர் கைது; பெண்கள் மீது கைவைத்தால் நடவடிக்கை: ஏடிஜிபி ரவி எச்சரிக்கை

ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்தார். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவு காரணமாக பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்திருந்தது. மாநில மகளிர் ஆணையமும் அறிக்கை வெளியிட்டு கண்டனத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏடிஜிபி ரவி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“கடந்த 2 நாட்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள். குடும்பத்தில் பெண்கள் மீது வன்முறையை ஏவியவர்கள். இந்த சமயத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

லாக் டவுன் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இதில் கணவன், மனைவி இடையேதான் பிரச்சினை அதிகம். கணவரோ அல்லது மனைவியோ இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும்.

கணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

உங்களுக்கு மனைவியை அடிக்க உரிமையே கிடையாது. அது சட்டப்படி குற்றம். எனவே ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஊரடங்கு காலகட்டத்தை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றிக் கொள்ளுங்கள்.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். பெண்கள், குழந்தைகளுக்கு உரிய மதிப்பைக் கொடுக்கவேண்டும். இது உங்களுக்கும் சமூகத்துக்கும் முக்கியமான ஒன்று.

பெண்களுக்கு நாங்கள் சொல்வது. உங்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் 181, 1091, 100, 102 இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டால் அடுத்த நிமிடமே உங்களுக்கான உதவி கிடைக்கும்''.

இவ்வாறு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x