Published : 10 Apr 2020 03:29 PM
Last Updated : 10 Apr 2020 03:29 PM

ஊரடங்கு நீட்டிப்பு?-முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் நாளை அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இது தவிர நச்சுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசுத்துறை சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

19 பேர் கொண்ட இந்த நிபுணர் குழு இன்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிபுணர் குழு ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப் பரிந்துரைத்தது. நேற்று 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் பேட்டி அளித்த முதல்வர், கரோனா தொற்று மூன்றாம் நிலை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமருடன் எதிர்க்கட்சிகள், முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் ஊரடங்கை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கு முன்னர் முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை நடக்கும் கூட்டத்தில், மேற்கண்ட நிலையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பதற்கான முடிவை அமைச்சரவை எடுத்து, அதை பிரதமரிடம் முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x