Published : 10 Apr 2020 08:14 AM
Last Updated : 10 Apr 2020 08:14 AM

சேலத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை மக்கள் வெளியே வர அனுமதி: வண்ணமிட்டு வாகனங்களுக்கு கட்டுப்பாடு

பொதுமக்கள் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் வகையில், சேலத்தில் வாகனங்களுக்கு அடையாள வண்ணமிடும் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் பொதுமக்கள் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே நடமாடும் வகையில், அவர்களது வாகனங்களுக்கு வண்ண அடையாளமிட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலத்தில் மக்கள் வெளியே வருவதைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, மக்கள் 5 நாட்களுக்குப் பின்னரே வெளியே நடமாட வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் கூறிம்போது, “சேலம் மாநகர பகுதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொது இடங்களுக்கு வந்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு, மக்கள் 5 நாட்களுக்குப் பின்னரே மீண்டும் வெளியே நடமாட அனுமதி வழங்கப்படும்.

இதற்காக, மக்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தினமும் ஒரு வண்ணம் வீதம் 5 நாட்களுக்கு அடையாளம் இடப்படும். இதனடிப்படையில், ஒருமுறை அந்தந்த நிறம் கொண்ட வாகனங்கள், குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே வெளியே வர வேண்டும்” என்றார்.

இலவச முட்டை

சேலம் மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் மதிய உணவுடன், இலவசமாக முட்டை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கி வைத்து கூறும்போது, “பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x