Published : 10 Apr 2020 07:52 AM
Last Updated : 10 Apr 2020 07:52 AM

சிறு விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஊரடங்கு அமலில் உள்ளதால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்குஉயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளியின் அவசியத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நேரத்தில் தமிழக அரசின் நிவாரணத் தொகையான ரூ. 1,000-ஐ ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யாமல், பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கவேண்டும் என கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, கரோனா அச்சுறுத்தல் காராணமாக சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து இதுவரை 96 சதவீதம் பேருக்கு ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதால் அடுத்த மே மாதமும் ரேஷன் கடைகளில் பொருட்களை விநியோகிக்கும்போது கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடன் உதவி திட்டம்

இந்த ஊரடங்கால் சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் நலனுக்காக சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்குதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

மேலும், பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடமளிக்காமல் விவசாய விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x