Published : 10 Apr 2020 07:34 AM
Last Updated : 10 Apr 2020 07:34 AM

தமிழகத்தில் வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 500 பேர் பாதிப்பு; கரோனா பரவல் 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பின்னர் முடிவு- மக்கள் ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற் றால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் 2-ம் நிலையில் இருந்து 3-ம் நிலைக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் கரோனா பரவலை கணக்கில் கொண்டு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கரோனா நோய் தொற்று பரவலை கண்காணிப்பது, சுகா தார, மருத்துவப் பணிகள், கிருமிகளை நீக்கும் நடவடிக்கை, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், வெளி மாநில தொழிலாளர்கள், இடம்பெயர்ந்துள்ளவர் களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உடனான ஒருங் கிணைப்பு உட்பட கரோனா தொடர் பான அனைத்து பணிகளையும் மேற் கொள்ள 12 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இக்குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணி களை மேற்கொள்ள 12 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி பணி வழங்கப்பட்டுள்ளது. துறைச் செயலாளர்கள், ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுக்கள் அனைத்தும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன.

இதுவரை விமான நிலையங்களில் 2,10,538 பயணிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். அதில் 92,814 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 32,075 பேர் 28 நாள் கண்காணிப்பை முடித்துள்ளனர்.

கரோனா பரிசோதனைக்காக அரசுசார்பில் 12, தனியார் சார்பில் 7 என மொத்தம்19 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 8-ம் தேதி வரை 6,095 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 738 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 344 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது. கரோனா அறிகுறிகளுடன் 1,953 பேர் உள்நோயாளிகளாக தனிப்பிரிவில் உள்ளனர். கரோனா இருப்பது கண்டறியப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 3 அடுக்கு முகக் கவசங்கள், என்-95 முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள், காய்ச்சல் மருந்துகள், ஐ.வி. திரவங்கள், பிசிஆர் கிட்ஸ் ஆகிய அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

வென்ட்டிலேட்டர்கள்

தமிழகத்தில் 3,371 வென்ட்டிலேட்டர்கள் உள்ளன. 2,500 வென்ட்டிலேட்டர்கள், 4 லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் துரித ஆய்வு உபகரணங்கள் உடனடியாக வந்துவிடும். மத்திய அரசு கொடுக்கும் 20 ஆயிரம் துரித ஆய்வு உபகரணங்களும் 10-ம் தேதிக்குள் (இன்று) வந்துவிடும்.

இந்த துரித ஆய்வு உபகரணங்கள் மூலம் முதலில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத் தினருக்கு பரிசோதனை செய்யப்படும். அடுத்து, அவர்களது வசிப்பிடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர் களுக்கு பரிசோதனை செய்யப்படும்.

படுக்கை வசதிகள்

அரசு மருத்துவமனைகளில் 22,049, தனியார் மருத்துவமனைகளில் 10,322 என மொத்தம் 32,371 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 137 தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை களில் கரோனா சிகிச்சை பெற ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 40,563 படுக்கை கள், 137 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் 96,773 படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் யாருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கரோனா பாதிப்பு முதல் நிலையில் இருந்து 2-ம் நிலைக்கு வந்துவிட்டது. 3-ம் நிலைக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், 2-ம் நிலையிலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்திய அளவிலும், தமிழகத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 500 அதிகமாகி உள்ளது.

இதை கணக்கில் கொண்டும், அடுத்து வரும் நாட்களில் கரோனா பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கணக்கில் கொண்டும்தான் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள 12 குழுக்கள் மற்றும் 19 பேர் அடங்கிய மருத்துவக் குழு அளிக்கும் ஆலோசனையின் அடிப் படையில் அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 500 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸ் பரவல் 3-ம் நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x