Published : 06 Apr 2020 07:57 AM
Last Updated : 06 Apr 2020 07:57 AM

மங்களூரூவில் இருந்து வந்தபோது ராமநாதபுரம் மீனவர் கடலில் மூழ்கி மரணம்: பரிசோதனைக்கு பயந்து நீந்தி வந்தவர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்ட பத்தைச் சேர்ந்த ரத்தினகுமார், புதிய விசைப்படகு வாங்க 15 மீனவர்களுடன், மார்ச் 18-ம் தேதி கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு வேனில் சென்றார். அங்கு படகை வாங்கிக் கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடல் வழியாக 15 மீனவர்களும் மண்டபத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் வரும்போது, மங்களூரில் மீன்பிடித் தொழிலாளர்களான உச்சிப்புளி அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த கண்ணன், மேட்டுக்காரான் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 5 பேரை அழைத்து வந்துள்ளனர்.

இந்த 5 மீனவர்களும் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தப்படுவோம் என பயந்து, சாலை வழியாக வருவதைத் தவிர்த்து படகில் வந்துள்ளனர். இந்த 5 மீனவர்களும், கடந்த சனிக்கிழமை பகலில் மண்டபம் வரும் வழியில் திருப்புல்லாணி அருகே வலங்காபுரி கடற்கரை பகுதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் கடலில் குதித்து நீந்தி வீட்டுக்குச் செல்ல முயன்றனர். இதில் 4 பேர் நீந்தி கரைக்கு வந்தனர். மீனவர் செல்வம் (44) கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் வலங்காபுரி கடற்கரையில் நேற்று ஒதுங்கியது.

செல்வத்தின் உடலை புதுமடம் மெரைன் போலீஸார் மீட்டனர். கடலில் நீந்தி வீட்டுக்குச் சென்ற மற்ற 4 பேரையும் சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து போலீஸார் கண்டறிந்தனர். இந்த 4 பேரையும், மண்டபத்தைச் சேர்ந்த 15 மீனவர்களையும் வெவ்வேறு முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x