Last Updated : 04 Apr, 2020 02:48 PM

 

Published : 04 Apr 2020 02:48 PM
Last Updated : 04 Apr 2020 02:48 PM

ஒட்டுமொத்தமாக ஊரடங்கிய 11-வது நாள்: மதுரை நிலவரம் என்ன?

தூங்கா நகரமான மதுரை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. காலை 6 மணிக்கு வெளியே போனால், இவர்கள் ஏன் இப்படிப் பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுகிறார்கள் என்று கோபப்படும் அளவுக்குச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருக்கிறது. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் சாலைகளில் விரைகின்றன.

குறிப்பாக, காய்கறிச் சந்தைகள் இடம் மாற்றப்பட்டுள்ள இடங்களிலும், முக்கியமான சூப்பர் மார்க்கெட்களுக்கு வெளியிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அங்கெல்லாம் போலீஸார் நிற்கிறார்கள். சமூக இடைவெளி கட்டுப்பாட்டைப் பின்பற்றி வரிசையில் போய் பொருட்களை வாங்கச் சொல்கிறார்கள் போலீஸார். இருப்பினும் 3 நாட்களுக்கு முன்பிருந்த கூட்டத்தோடு ஒப்பிட்டால் இப்போது கூட்டம் குறைவே.

முன்பெல்லாம் கூட்டம் கூடுகிற இடங்களில் சைக்களில் டீ விற்கிற ஆட்கள் நிற்பார்கள். இம்முறை அவர்கள் அதிகம் கண்ணில் தென்படவில்லை. பல சூப்பர் மார்க்கெட்களில் அலமாரிகள் காலியாகிவிட்டன. நல்லெண்ணெய் வாங்கச் சென்றவர்கள் கடலை எண்ணெயையும், நாட்டுப் பொன்னி வாங்கச் சென்றவர்கள் கர்நாடகப் பொன்னியையும் வாங்கி வர வேண்டிய அளவுக்கு சரக்குத் தட்டுப்பாடு.

குறிப்பாக, கோதுமை, அரிசி மாவு பாக்கெட்கள் சுத்தமாக காலி. குளியல் சோப்புகளுக்கும் கடும் கிராக்கி. ஒவ்வொருவரும் டஜன் கணக்கில் சோப்பு வாங்குவதால், ஒருவருக்கு 4 சோப்புக்கு மேல் கிடையாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் கடைக்காரர்கள்.

கறிக்கடைக்கு லீவு
காய்கனிச் சந்தைகள் அனைத்துமே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் கொஞ்சம் திணறுகிறார்கள். ஆனால், புதிய இடங்கள் மைதானமாக இருப்பதால் நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால், உழவர் சந்தையைத் தவிர மற்ற இடங்களில் எல்லாமே காய்கனி விலை மிக அதிகம் என்று மக்கள் புலம்புகிறார்கள்.

மதுரை ஒத்தக்கடையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தையில் காய்கறி வாங்கினேன். விலை உயர்வோடு சேர்த்து, சில வியாபாரிகள் எடை மோசடியும் செய்கிறார்கள். ஒரு கிலோவில் கால் கிலோ வரை எடை குறைகிறது.

கடந்த வாரம் முழுக்க ஆட்டிறைச்சிக் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஞாயிறன்று கூடிய பெருங்கூட்டம் காரணமாகவும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாலும் ஆட்டிறைச்சிக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனால் நேற்று ஒரு ஆட்டுக்கறிக் கடைகூட திறக்கப்படவில்லை. நகரின் மிக முக்கிய கறிக்கடை சந்தான நெல்பேட்டை பகுதியில் அத்தனை கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆட்டுக் கால்களையாவது வாட்டி விற்க ஆளிருப்பார்களா என்று எதிர்பார்த்துச் சென்று நானும் ஏமாந்தேன். கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகள் வழக்கம் போல இயங்கின. முட்டையும் கிடைக்கிறது. ஆனால், நாமக்கல் விலை 3.50 என்றால், இங்கே 6 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

சுற்றுலாத் தலங்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பூட்டிக்கிடப்பதால், அதைச்சுற்றியுள்ள அத்தனை வீதிகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. செயின்ட் மேரிஸ் சர்ச், மதுரை திருமலை நாயக்கர் மகால் போன்றவையும் பூட்டிக் கிடக்கின்றன. பல வீதிகளில் மக்கள் கயிறு கட்டி அடைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தயிர் மார்க்கெட் பகுதியில் காவல்துறையினரே தடுப்பு அமைத்து அடைத்திருக்கிறார்கள். முக்கியமான உணவகங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன.

பகல் 12 மணிக்குப் பிறகு போலீஸ் கெடுபிடி தளர்கிறது. ஆனால், மக்களும் வெளியே வருவதில்லை. காரணம், காய்கறி, பலசரக்குக் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுவிடுகின்றன. வெயிலும் மிகக் கடுமையாக இருக்கிறது. நேற்று மதுரையில் பதிவான வெயில் அளவு 101 டிகிரி. அதேநேரத்தில், வெளியாட்கள் வர வாய்ப்பில்லாத குறுகிய சந்துகளிலும், அபார்ட்மென்ட்களிலும் மக்கள் ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கிறார்கள்.

1960 வாகனங்கள் பறிமுதல்
கிராமங்களில் இன்னமும் மக்கள் இயல்பாகவே இருக்கிறார்கள். அங்குள்ள கடைகள் அனைத்தும் திறந்திருக்கின்றன. வெளியூரில் வேலை பார்த்த இளைஞர்கள் எல்லாம் ஊர் திரும்பிவிட்டதால், அவர்கள் கண்மாய்க்கரை ஆலமரம், கிராமத்துக் கோயில், ஊர் மந்தை போன்ற இடங்களில் கும்பலாக உட்கார்ந்து சீட்டாடுவது, ஆடு புலியாட்டம் ஆடுவது என்று பொழுதைப் போக்குகிறார்கள். சிறு குழந்தைகள் மட்டுமே வீட்டிற்குள் அடங்கியிருக்கின்றன.

மதுரை மாநகரில் காரணமின்றி ஊர் சுற்றியதாக இதுவரையில் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 841 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை புறநகர் மாவட்டத்தில் மொத்தம் 1,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,851 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆக மொத்தம், 1960 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் மதுரை இன்னும் மதுரையாகத்தான் இருக்கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x