Published : 04 Apr 2020 07:25 AM
Last Updated : 04 Apr 2020 07:25 AM

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட 22 இடங்கள் முழுமையாக முடக்கம்

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள புதுப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட 22 இடங்களை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் நேற்று முழுமையாக முடக்கியுள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகல்நிலவரப்படி மொத்தம் 44 பேருக்குகரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த44 நபர்களின் முகவரிகளை மாநகராட்சி தொகுத்துள்ளது. அதில் அதிகபட்சமாக புதுப்பேட்டை, பிராட்வே, ராயபுரம் ஆகிய பகுதிகளில் 10 நோயாளிகளும், அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் 7 பேரும்,மாம்பலம், சைதாப்பேட்டை பகுதிகளில் 6 பேரும், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை ஆகிய இடங்களில் 5 பேரும் வசித்துவந்தது தெரியவந்தது. மேலும் சாந்தோம், கோடம்பாக்கம் பகுதிகளில் 4 பேரும், மடிப்பாக்கத்தில் 3 பேரும், எண்ணூர், போரூர் ஆகிய இடங்களில் தலா 2 பேரும், சோழிங்கநல்லூர் அடுத்த பனையூர், கோட்டூர்புரம், திருவான்மியூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட நோயாளியின் வீட்டைச் சுற்றி சுமார் 2 ஆயிரத்து 500 வீடுகள் வரை உள்ள பகுதி முழுவதுமாக தடுப்புகளை ஏற்படுத்தி அடைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 14-ம்தேதி வரை அப்பகுதிகளுக்குள் யாரும் நுழைய முடியாது. யாரும் வெளியிலும் வரக்கூடாது. பொருட்கள் ஏதேனும் அவசரமாக தேவை எனில், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார் மற்றும் மாநகராட்சி அலுவலர்களை தொடர்புகொண்டு, உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு சென்னையில் 22 இடங்களில் தலா 2 ஆயிரத்து500 வீடுகள் கொண்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் முடக்கப்பட உள்ள பகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாநகராட்சி முழுவதும் அனைத்து வீடுகளிலும் சோதனைமேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x