Published : 01 Apr 2020 22:07 pm

Updated : 01 Apr 2020 22:07 pm

 

Published : 01 Apr 2020 10:07 PM
Last Updated : 01 Apr 2020 10:07 PM

கரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?- மூத்த விஞ்ஞானியின் பயன் தரும் தகவல்

what-do-we-know-about-coronavirus-what-do-we-need-to-know

சமூக ஊடகம், வாட்ஸ்அப் மற்றும் இணையத்தின் மூலமாக கரோனா வைரஸைப் பற்றி பல்வேறு விஷயங்கள் வேகமாகப் பரவுகின்றன. இதில் சில உண்மையாக இருந்தாலும், பல்வேறு தகவல்கள் அடிப்படையற்றதாகவே இருக்கின்றன, கரோனா குறித்த சந்தேகங்களுக்கு மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் விளக்கமாக பதிவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கிலும் பரவி வரும் வேளையில், இந்த ஆட்கொல்லி வைரஸ் குறித்த சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுக்கு பிறகு, விக்யான் பிரசார் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன், இது குறித்த பலவற்றை கூறுகிறார்.

இதுகுறித்து ஒரு அவர் அளித்துள்ள விளக்கம்:

தொற்று: தொண்டை மற்றும் நுரையீரலில் இருக்கும் மெல்லிய செல்களைக் கொண்ட புறப்படலத்தை இந்த வைரஸ் தாக்குகிறது. பெரும்பாலும் தொண்டையிலும், நுரையீரலிலும் காணப்படும் ஏஸ் 2 (ACE2) ஏற்பிகளுடன் சார்ஸ்-கோவி-2 (SARS-CoV-2) ஒன்றாக இணைந்து கொள்கிறது.

உங்கள் தோலில் ஏஸ்2 வெளிப்பாடு இல்லாமல் இருப்பதால், அங்கு ஒட்டிகொண்டிருக்கும் இருக்கும் வைரஸ் தீங்கு விளைவிக்காது. மூச்சுக் குழாய், கண்கள் மற்றும் வாயின் வழியே இந்த வைரஸ் நுழைகிறது. வைரஸை நமது வாய், மூக்கு, கண்களுக்கு எடுத்து செல்வதில் நமது கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிக்கடி கைகளை 20 நொடிகள் சோப்பு போட்டு கழுவுவது இந்த தொற்றைத் தடுக்க உதவும்.

தொற்று அளவு: ஒரு காட்டுக் குரங்கை பாதிப்படையச் செய்ய 700000 (PFU) தேவைப்பட்டது. பெருக்கம் உருவாக்கும் அலகு (Plaque forming unit - PFU) என்பது பாதிப்பு மாதிரியை அளக்கும் அலகாகும். அந்த விலங்கு எந்த மருத்துவ அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என்ற போதிலும், அதன் மூக்கில் இருந்து வந்த நீர்த்துளிகளிலும், எச்சிலிலும் வைரல் சுமை இருந்தது.

700000 பிஎஃப்யூவுக்கும் அதிகமான அளவில் இருந்தால் தான் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும். மரபணு மாற்றப்பட்ட ஏஸ்2 ஏற்பிகள் கொண்ட எலியின் மீது நடத்திய விலங்கு ஆய்வில், அதற்கு சார்ஸ் பாதிப்பு வர 240 பிஎஃப்யூ அளவே போதும் எனத் தெரியவந்தது. அதோடு ஒப்பிடும் போது, மனிதர்களுக்கு பாதிப்பு வருவதற்கு700000 பிஎஃப்யூ நாவல் கொரோனாவைரஸ் தேவைப்படுகிறது.

தொற்றுக் காலம்: ஒருவர் மற்றவருக்கு தொற்றை கடத்தும் கால அளவு துல்லியமாகத் தெரியாவிட்டாலும், 10 முதல் 14 நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. தொற்றுக் காலத்தை செயற்கையாகக் குறைத்தலே தொற்றை ஒட்டுமொத்தமாகத் தடுக்க முக்கியமான வழியாகும். மருத்துவமனையில் வைத்தல், தனிமைப்படுத்துதல், பொது முடக்கம் மற்றும் நடமாடுதலைத் தடுத்தல் ஆகிய அனைத்தும் பயனுள்ள நடவடிக்கைகள்.

யாரெல்லாம் பாதிக்கப்படலாம்: வைரஸால் பாதிக்கப்பட்ட யாரும் அறிகுறிகள் தோன்றும் முன்னரே அடுத்தவரை பாதிக்கலாம். தொற்றைக் கடத்தும் பெரும்பாலானோர் எந்த அறிகுறியையும் காட்டமாட்டார்கள். இருமும் போதும், தும்மும் போதும் நம் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்வது தொற்றைக் குறைக்க உதவும். ஒட்டு மொத்த பாதிப்புக் காலம் வரை, பாதிக்கப்பட்ட நபரின் சளி, கோழை, மலம் ஆகியவற்றில் இந்த வைரஸ் இருக்கும்.

நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம்: நீர்த்துளிகள் வழியே தான் பெரும்பாலும் வைரஸ் கடத்தப்படுகிறது. இதற்கு ஆறு அடி தூரத்திற்கும் குறைவான நெருங்கியத் தொடர்பு தேவைப்படுகிறது. இதனால் தான், காய்கறிச் சந்தை அல்லது பல்பொருள் அங்காடி போன்ற பொது இடங்களில், நாம் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர்கள் தள்ளி நிற்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

சமூக இடைவெளியின் மூலம் நோய் பரவலை 44% வரை குறைக்கலாம் என்று ஹாங்க்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தொலைபேசிகள், கதவுக் குமிழ்கள், மேற்பரப்புகள் ஆகியவை தொற்றைப் பரப்புவதற்கான உயிரற்ற, அதே சமயம், சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள மூலக் கடத்துநர்கள் ஆகும்.

ஆனால், இதைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. கதவுக் குமிழ்கள், மின் தூக்கி அழைப்புப் பொத்தான்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கொடுக்கல் வாங்கல் இடங்களைத் தொட்ட பின்னர் நமது கைகளை சுத்தப்படுத்திக்கொள்வது பாதுகாப்பானதாகும்.
எத்தனை பேரை பாதிக்கலாம்: பாதிக்கப்பட்ட ஒரு நபரால் சராசரியாக எத்தனை புதிய பாதிப்புகளை உருவாக்க முடியும் என்பதைக் கூறும் மனித கடத்துதல் அளவு 2.2லிருந்து 3.1 ஆகும். எளிதான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 2.2லிருந்து 3.1 நபர்கள் வரை பாதிப்படையச் செய்கிறார். உடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம், உண்மையான தொற்றுதல் அளவை செயற்கையாகக் குறைத்து, பரவுதல் விகிதத்தைக் குறைக்கலாம்.

இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது: வௌவால் சூப் குடித்ததன் மூலம் இது வரவில்லை. கொதிக்க வைத்தால் இந்த வைரஸ் அழிந்து விடும். சார்ஸ்-கொவி-2 வைரஸ் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு வந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், மனிதர்களுக்கு வருவதற்கு முன்பு, வௌவாலில் இருந்து இடைப்பட்ட இன்னொரு உயிரினத்துக்கு இது சென்றதாக சமீபத்தில் நடந்த மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சார்ஸ்-கொவி-2 வைரஸின் ஒரு பரம்பரை மனிதர்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்ததாக இன்னொரு ஆய்வு கூறுகிறது.

எப்படி அது வளர்ந்தது: சார்ஸ்-கொவி-2 வைரஸ் என்பது, விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்னர் மனிதனில்லாத ஏதாவது விலங்கினுக்குள் இயற்கையான விஷக்கறையாக வளர்ந்திருக்க வேண்டும். அல்லது, விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதற்கு பின் மனிதர்களுக்குள்ளேயே இயற்கையான விஷக்கறையாக வளர்ந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டில் எது சரி என்பதை ஆய்வுகள் தான் கூற வேண்டும். மனித பாதிப்புக்கும் தொற்றுக்கும் சார்ஸ்-கொவி-2வில் உள்ள எந்தப் பிறழ்வுகள் காரணமென்று இன்னும் எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை.

சார்ஸ்-கொவி-2 எப்போது வெளியில் வந்தது: டிசம்பர் 2019 க்கு முன் பதிவான சார்ஸ்-கொவி-2 பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், சார்ஸ்-கொவி-2வின் முதல் மனித பாதிப்புகள் அக்டோபர் மத்தியில் இருந்து டிசம்பர் மத்தி வரை தோன்றி இருக்கலாம் என்று முதல்கட்ட மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த ஆரம்ப பாதிப்பில் இருந்து பெரும்பரவல் வரை ஒரு இடைவெளி இருப்பதாக இதற்கு அர்த்தம்.

விலங்குகளை இது பாதிக்குமா: மனிதர்களைத் தவிர, வௌவால், காட்டுப்பூனை மற்றும் பன்றியின் செல்களை சார்ஸ்-கொவி-2 பாதிக்கும் என மூலக்கூறு மாதிரிகள் தெரிவிக்கின்றன. இது வீட்டு விலங்குகளையும், கால்நடைகளையும் பாதிக்காது. முட்டை மற்றும் கோழிகளை சாப்பிடுவதாலோ சார்ஸ்-கொவி-2 பாதிப்பு வராது.

ஒருவருக்கே இரண்டு முறை வருமா: ஒரு முறை தட்டம்மை வந்தால், நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறொம். பெரும்பாலும் நமக்கு அதற்குப் பிறகு தட்டம்மை வருவதில்லை. பரிசோதனை மூலம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட குரங்குகளுக்கு மீண்டும் பாதிப்பு வரவில்லை.

அதே போல், குணமானதற்கு பின்னர் சார்ஸ்-கொவி-2 மீண்டும் மனிதர்களுக்கு வந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால், இந்த நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை காலம் வரை உடலில் இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த நோய் எவ்வளவு கடுமையானது: கொவிட்-19 என்பது மரண தண்டனையல்ல. பெரும்பாலான கொவிட்-19 பாதிப்புகள் லேசானவையே (81%). 15% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது மற்றும் 5% பேருக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது. அதாவது, பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை அனுமதி கூட தேவையில்லை.

யாரெல்லாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்: சுகாதாரப் பணியாளர்கள் எளிதில் பாதிப்படைவார்கள். லொம்பார்டி, இத்தாலியில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, 20% சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பொது மக்களைப் பொருத்தவரை, வயதானோர், அதுவும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர், இதற்கு முன் இதய நோய்கள் உள்ளோர், ரத்த அழுத்தம் உள்ளோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உள்ளோருக்கு ஆபத்து அதிகம்.

மரணத்துக்கான காரணம் என்ன: மூச்சு விட முடியாமை அல்லது இதய செயல்பாட்டின்மையோடு இணைந்த மூச்சு விட முடியாமை தான் பெரும்பாலான மரணங்களுக்கு காரணம். நுரையீரலுக்குள் திரவம் கசிந்து மூச்சு விடுதல் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கித் தள்ளுதலே அடிப்படை மருத்துவக் காரணமாகும்.

கருவியின் துணையுடன் நுரையீரலுக்குள் உயிர்க்காற்றை அனுப்புதலுடன் (ventilation) (தேவைப்பட்டால்) இணைந்த ஆதரவுப் பராமரிப்பே தற்போதைக்கு கொவிட்-19க்கான சிகிச்சையாகும். பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவற்றின் முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

பால் பாக்கெட்டுகள் அல்லது செய்தித் தாள்கள் மூலம் வைரஸ் பரவுமா: நெகிழி மற்றும் எஃகு பரப்புகளின் மீது சார்ஸ்-கொவி-2 மூன்று தினங்கள் வரை இருக்கும். வைரல் சுமை 10000 பிஎஃப்யூ என இருக்கும் போது கூட செய்தித் தாள் மற்றும் பருத்தி துணி மீது அது 5 நிமிடங்களே இருந்தது. பால் பாக்கெட்டுகளை கழுவுவதே வைரஸை அழிக்க போதுமானது.

காற்றின் மூலம் பரவுமா: காற்றில் 2.7 மணி நேரத்துக்கு மட்டுமே வைரஸ் வாழும். அதனால், பால்கனி, மொட்டை மாடி போன்ற திறந்த வெளிகளில் இருப்பது பாதிப்பளிக்காது.

விஷத் தன்மை குறைவாக உள்ளதா: பல தன்மைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பரவல் தொடர்பான மாற்றங்கள் குறித்தோ, நோயின் தீவிரம் குறித்தோ பிறழ்வுகள் எதையும் ஆய்வுகள் இது வரை தெரிவிக்கவில்லை.

கோடைக்காலத்தின் ஆரம்பமோ அல்லது மழைக் காலமோ ஏதாவது ஆறுதலை தருமா: வெப்ப நிலையின் பருவகால ஏற்றத்தினாலோ, ஈரப்பதத்தினாலோ பரவுதல் குறையும் என்பதற்கான எந்த வலுவான ஆதாரமும் இது வரை இல்லை”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

What do we knowCorona virusWhat do we need to knowகொரோனாவைரஸ்நமக்கு என்ன தெரியும்நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்மூத்த விஞ்ஞானிபயன் தரும்தகவல்கரோனா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author