Last Updated : 30 Mar, 2020 04:37 PM

 

Published : 30 Mar 2020 04:37 PM
Last Updated : 30 Mar 2020 04:37 PM

கரோனா சிறப்பு மருத்துவ மையத்துக்கு எனது வணிக வளாகத்தைத் தருகிறேன்: மதுரை இளைஞர் அரசுக்குக் கடிதம்

கரோனாவை மனித குலத்துக்கு எதிரான போராகப் பிரகடனம் செய்திருக்கின்றன உலக நாடுகள். இன, மத, நாட்டு எல்லை வேறுபாடுகளை மறந்து அனைத்து நாடுகளும் கரோனாவை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் டைல்ஸ் விற்பனைத் தொழில் செய்துவரும் வெங்கட்சுப்பிரமணி எனும் இளைஞர், புதுநத்தம் சாலையில் உள்ள தனக்குச் சொந்தமான 12,000 சதுரடி பரப்புள்ள நான்கு மாடி வணிக வளாகத்தை கரோனா தடுப்புப் பணிக்காக அரசுக்கு வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணைய தளப்பிரிவிடம் பேசிய வெங்கட்சுப்பிரமணி, "கரோனா பாதிப்பால் வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடி வருவதை பத்திரிகை செய்திகள் மற்றும் மின் ஊடகங்கள் வழியாகப் பார்த்தபோது, திகைப்பாக இருந்தது. இந்த நேரத்தில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பதையோ, அரசியல் ரீதியாகக் கருத்துச் சொல்வதையோவிட நம் அரசுக்கு நாமும் துணை நிற்பதே சரி என்று தோன்றியது.

நான்கு தளங்கள் கொண்ட என்னுடைய வணிக வளாகத்தில் தற்போது கடைகள் எதுவும் இல்லை. மின்வசதி, கழிப்பறை, தண்ணீர் வசதி போன்றவையும் இருக்கின்றன. எனவே, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள அரசிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுத்தேன். எனது குடும்பத்தினரும் இதனை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து எனது கட்டிடத்தின் புகைப்படம், அதில் உள்ள வசதிகள் குறித்தும், இதனை அரசு பயன்படுத்திக்கொள்ள முழு மனதுடன் சம்மதிக்கிறோம் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

தென் தமிழக சானிட்டரி, டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேஷனின் இணைச் செயலாளராக நான் இருக்கிறேன். எங்கள் சங்கம் சார்பில் ஏற்கெனவே பல சமூகப் பணிகளைச் செய்துள்ளோம். மருத்துவமனையாகப் பயன்படுத்த கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்றாலும் அதனையும் எங்கள் சொந்தச் செலவில் செய்து தர தயாராய் இருக்கிறோம்.

அதேபோல கரோனா காரணமாக தங்க இடமின்றி, உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கும் உதவவும் தயாராக இருக்கிறோம். அரசு சார்பில் எங்களை எந்நேரம் வேண்டும் என்றாலும் 9842156629 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x