கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தெருக்களில் கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தெருக்களில் கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்
Updated on
1 min read

புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி அப்பகுதியில் உள்ள வெண்ணிலா நகரில் கிருமி நாசினி மருந்து தெளித்தார்.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர்ப்புறங்களில் காரில் வலம் வந்து ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் நாராயணசாமி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று (மார்ச்-29) புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கிருந்த வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்குமாறும், வியாபாரிகளும், பொதுமக்களும் முகக் கவசம் அணியுமாறும் கூறினார்.

தொடர்ந்து அங்கிருந்து நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட வெண்ணிலா நகருக்குச் சென்ற முதல்வர் நாராயணசாமி, அங்கு நகராட்சி ஊழியர்கள் தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பதைப் பார்வையிட்டார். உடனே அந்த மருந்து தெளிப்பானை தன் கையில் வாங்கி, அங்குள்ள தெரு முழுவதும் இருபுறமும் கிருமி நாசினி தெளித்தார்.

இதனைத் தொடர்ந்து நகர்ப் பகுதி முழுவதும் சென்று பார்வையிட்டு பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி ஆலோசனைகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in