Published : 25 Mar 2020 04:02 PM
Last Updated : 25 Mar 2020 04:02 PM

கரோனா நிவாரணம்: மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நிறைவேற்றுக; தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், "கொடிய கரோனா வைரஸைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் உடனே கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக அரசைப் பொறுத்தவரை, 'குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய்', 'கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1,000 ரூபாய்' என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.

கரோனா பாதிப்பால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் சரியான முறையில் இந்த அரசு அணுகவில்லை. 'அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்குமே நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும்' என்ற நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி உண்டா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை.

சிறு வியாபாரிகள் அனைவருமே பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகவே, பூ விற்பவர்களிலிருந்து அனைத்து நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகளுக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், பதிவு செய்யாதவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் இந்த நிவாரணமும், நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என்றாலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,000 ரூபாய் தவிர்த்து, 'பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மட்டும் மேலும் 1,000 ரூபாய் நிதியுதவி' என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் பணிபுரிந்தவர்களுக்கு இரு நாட்களின் ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் போதாது. தற்போது அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது, ஊரடங்கு உத்தரவால் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு. அதை ஈடுகட்டுவதற்கான முயற்சிகளில் இந்த அரசு உடனே ஈடுபட வேண்டும்.

ஆகவே, முதலில் ஆட்டோ, ஓலா, ஊபர் டாக்சி உள்ளிட்ட ஓட்டுநர்கள் அனைவரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைப் பணம் வசூலை வங்கிகள் மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடன்கள் மீதான எவ்வித வசூலும் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது. குறிப்பாக, டிட்கோ உள்ளிட்ட தமிழக அரசு நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் வசூலைத் தள்ளி வைத்து, வட்டி, அபராத வட்டி போடுவதையும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்.

கரோனா தடுப்பில் உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றிட வேண்டியதிருப்பதால், குறைந்தபட்சம் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் உடனடியாக 3 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கிட வேண்டும்.

மேலும், 10, 11-ம் வகுப்புத் தேர்வுகள் எழுதியவர்கள் குறித்தும் முடிவு எடுக்கவில்லை. கரோனா அச்சத்தின் உச்சத்தில் நடத்தப்பட்ட 12-ம் வகுப்புத் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. ஆகவே, இந்த இரண்டு விஷயங்களிலும், பதற்றத்தில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கவலையில் உள்ள பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கான அவசர முடிவுகளை எடுக்காமல், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் ரெசிடன்ட் மருத்துவர் ஜி. சந்திரசேகரை அவசர அவசரமாகத் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றியதன் மர்மம் என்ன என்று புரியவில்லை. அதற்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்க வேண்டும்.

ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கரோனா வைரஸை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அரசின் 'தனிமைப்படுத்துதல்' முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5,000 நிதியுதவி வழங்கிட வேண்டும் என்றும், அதை அவர்களின் வங்கிக் கணக்குக்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், 144 தடையுத்தரவை அமல்படுத்தும் காவல்துறையினர் ஆகியோருக்கு 5,000 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொள்வதுடன், 'ஊரடங்கு பிறப்பித்து விட்டோம். எல்லாம் முடிந்து விட்டது' என்று அமைதியாக இருக்காமல், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கிட வேண்டும் என்றும், அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x