Published : 25 Mar 2020 06:56 AM
Last Updated : 25 Mar 2020 06:56 AM

உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தடையின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும்:பணியாளர்களுக்கு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் உத்தரவு

உரிய பாதுகாப்பு உபகரணங் களுடன் தடையின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.நா.மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தின் பணியாளர்கள் கும்பலாக செல்லாமல், சுழற்சி முறையில் கரோனா வைரஸ் பரவாத வகையில் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று குடிநீர் வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பணியில் எவ்வித தொய்வும் ஏற்படாமலும், பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகாரும் வராத வகையிலும் பணிபுரிய வேண்டும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் தரத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் மற்றும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்கவாரிய பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வகை ஒப்பந்த ஊழியர்களையும் உரிய மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரியவைக்க வேண்டும். முதியோர், நோயுற்றோர் மற்றும்சந்தேகத்துக்குரிய நபர்களை பணியமர்த்தக்கூடாது. தலைமை நீரேற்று நிலையம், நீர் சேமிப்பு நிலையம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி போன்ற முக்கிய இடங்களில் தெரியாத நபர்களையோ, சந்தேகத்துக்குரிய நபர்களையோ அனுமதிக்கக் கூடாது. குடிநீர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அதனை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகர் நீங்கலாக குடிநீர் குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற காரணங்களால் குடிநீரின் அளவு மற்றும் தரத்தில் குறைபாடு ஏற்பட்டால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செல்போன் 94458 02145, இணையதளம் (twadboard.gov.in), முகநூல் (twadboard), டுவிட்டர் (twadboard) ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x