Published : 23 Mar 2020 04:51 PM
Last Updated : 23 Mar 2020 04:51 PM

உதகை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு; ஆட்சியர் தகவல்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி வரை வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய 142 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 23) அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் வீடுகளிலேயே இருப்பது தான் நல்லது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடக்கூடாது.

அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியில் செல்லக்கூடாது.

இந்நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய 142 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் அவர்களது விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லை. இதனால், மக்கள் இவர்களை ஒதுக்குவதோ, அவர்களை குறித்து அவதூறு தகவல்களையோ பரப்பக் கூடாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

உதகை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உள்ளது என கண்டறியப்பட்டால், அவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.

இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை மக்கள் ஒத்தி வைக்கலாம். ஒத்தி வைக்க முடியாத நிலையில், அதிகளவில் கூட்டம் கூட்டாமல் நடத்தலாம்" என்றார்.

பேருந்துகள் இயக்கம் குறைப்பு;

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்துவிட்டது. மேலும், மாவட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் பிற மாவட்டங்களுக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு போக்குவரத்துk கழகமும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் (நிர்வாகம்) கணேஷ் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் 320 அரசு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டு வந்த 20 பேருந்துகள் கடந்த 18-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

காலியாக உள்ள உதகை மத்திய பேருந்து நிலையம்

கரோனா வைரஸ் அச்சத்தால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லை. இதனால், பயணிகள் குறைவாக உள்ள வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். மேலும், அரசும் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பேருந்துகளின் இயக்கத்தை குறைக்க வலியுறுத்தி வருவதால், போக்குவரத்துக் கழகம் சார்பில் 40 சதவீத பேருந்துகள் இயக்கத்தை நிறுத்தியுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x