Published : 23 Mar 2020 03:19 PM
Last Updated : 23 Mar 2020 03:19 PM

15 நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்: இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

மார்ச் 31 வரை சுய ஊரடங்கை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் வரும் ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என நுண்ணியிர் மருத்துவர் சங்கம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தடுப்பு மருத்துவ எச்சரிக்கை தமிழகம் முழுதும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்றுகூடுதலை தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் அதை மதிக்காமல் நடக்கும் போக்கும், மதுக்கடைகள் உள்ளிட்டவை மூடாமல் பொதுமக்கள் அங்கு கும்பலாக சேர்வதும், விழாக்கள் நடத்துவது போன்றவைகள், வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்துவதில் காட்டும் அலட்சியம் குறித்து பிரதமர் உட்பட பலரும் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் (Microbiologists Society India) தரப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதன் தலைவர் தேஷ்முக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே,

தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை எங்கள் சங்கம் பாராட்டுக்கிறது. அதே நேரத்தில் சுய ஊரடங்கை (Janata Curfew) இன்னும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் கொரோனா பரவல் சங்கிலியை நம்மால் உடைத் தெறிய முடியும்.

இந்த 14 நாட்கள் என்பது கொரோனா வைரஸ் அதிகபட்சமாக உயிர் வாழும் நாள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 14 நாட்கள் சுய ஊரடங்கை நடத்துவதன் மூலம் நிச்சயமாக கொரோனாவை இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்று நம்புகிறோம்.

இதனை செய்யாவிட்டாலும், சுய ஊரடங்கை சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் வரும் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறியுடன் மக்கள் நிரம்பி வழிவார்கள்.

எனவே, நாங்கள் இங்கு குறிப்பிட்டவற்றை நீங்கள் கவனத்தில் கொண்டு, நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x