Published : 21 Aug 2015 09:13 AM
Last Updated : 21 Aug 2015 09:13 AM

குந்தாரப்பள்ளி வங்கி கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் மேலும் 4 பேர் கைது

குந்தாரப்பள்ளி வங்கி கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப் பள்ளி ராமாபுரம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ரூ.12 கோடி மதிப்புள்ள, 48 கிலோ எடையுள்ள 6,038 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், உத்தரபிரதேச மாநி லத்தை சேர்ந்த முகமது ஷாநவாஸ், அப்ரர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், ஷாநவாஸ் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரியில் கிருஷ்ண கிரிக்கு வந்து, கொள்ளை சம்பவத் தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கம்ராயலம் கிராமத்தை சேர்ந்த ஷேக்அலிகான் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் பல்வேறு மாநிலங்களில் கொள்ளை கும்பலைப் பற்றி விவரங்களை சேகரித்தனர். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி டெல்லி சராய்காலேகான் பேருந்து நிலையம் அருகே கொள்ளை கும்பல் காரில் வருவதாக, டெல்லி உளவுப் பிரிவு போலீஸார், தமிழக தனிப்படை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தனிப்படை போலீஸார் காரை வழிமறித்து பிடித்தனர். காரில் வந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாதிக்அலிகான், ஃபஹீம் (எ) பாடா, யூசுப் மற்றும் அஸார் அலி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பிடிப்பட்ட 4 பேரையும் டிஎஸ்பி சந்தானபாண்டியன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீ ஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி கொள்ளையில் இது வரை 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இவ்வழக் கில் அரை கிலோ தங்கம் உட்பட ரூ. 45 லட்சத்தை பறிமுதல் செய்துள் ளதாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நிலவரம் குறித்து அப்போது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x