Published : 21 Mar 2020 08:11 AM
Last Updated : 21 Mar 2020 08:11 AM

சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாடகையை குறைக்க நடவடிக்கை- பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை லாயிட்ஸ் காலனிவீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் உயர்த்தப்பட்ட வாடகை, பராமரிப்பு கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது திமுகஉறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சென்னை லாயிட்ஸ் காலனியில் வீட்டு வாடகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம்என 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பராமரிப்பு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றை குறைக்க வேண்டும்.

அவகாசம் அளிக்க வேண்டும்

அதேபோல, பீட்டர்ஸ் காலனிகுடியிருப்பில் உள்ள வீடுகளைகாலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். அங்குள்ள பராமரிப்பு கட்டணம் வசூலிக்கும் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் பீட்டர்ஸ் காலனியில் அமைக்க வேண்டும். அங்கு வெளி நபர்களின் வாகனங்கள், பேருந்துகள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

அரசு ஊழியர் குடியிருப்புகளின் வாடகை, பராமரிப்பு கட்டணத்தை பின்பற்றி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டுக்கு வாடகை, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வாரியம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

வாடகை குறைவு

சென்னையில் உள்ள வாரிய குடியிருப்புகளை பொறுத்தவரை, மாநகரப் பகுதியில் சதுர அடிக்கு ரூ.14.15, புறநகரில் ரூ.11.45 என வாடகை வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் சென்னை மாநகரில் உள்ள தனியார் வாடகை வீடுகளுக்கு சந்தை மதிப்பாக சதுர அடிக்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது. அதை ஒப்பிடும்போது வாரிய குடியிருப்புகளுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகை மிகவும் குறைவு. அதேபோல பராமரிப்பு கட்டணம் மாநகரில் ரூ.1,100, புறநகரில் ரூ.880 என வசூலிக்கப்படுகிறது.

எனினும், லாயிட்ஸ் காலனி வாரிய குடியிருப்புதாரர்களின் கோரிக்கை அடிப்படையில், வாடகை, பராமரிப்பு கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

பீட்டர்ஸ் காலனி பிரச்சினை

பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பீட்டர்ஸ் காலனி குடியிருப்பிலேயே பராமரிப்பு கட்டணம் வசூலிக்கும்மையம் அமைக்க நடவடிக்கைஎடுக்கப்படும். குடியிருப்புவாசிகளின் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் உள்ளே நிறுத்தாமல் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x