Published : 21 Mar 2020 07:21 AM
Last Updated : 21 Mar 2020 07:21 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் செயலகம் தெரிவித்தது என்ன?- சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சதித் திட்டம் தொடர்பாக பல்துறை கண்காணிப்பு முகமை (எம்டிஎம்ஏ) அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் செயலகம் பதில் அளித்துள்ளதாக பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு பேசும்போது, “பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலை குறித்து கட்சி வேறுபாடின்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசோ, 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறிவிட்டது. எனவே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் ஆளுநர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்றன. ஆனால், உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தெளிவுபடுத்திய பின், காலம் தாழ்த்தாமல், முதல்வர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். ஆளுநர் தமது முடிவை இன்னும் நமக்கு அறிவிக்கவில்லை.

அதேபோல், ஆளுநர் இவ்வளவு காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கூறவில்லை. மாறாக, அடுத்த முறை வழக்கு வரும்போது, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவு என்ன என்பதை அவரிடம் கேட்டு தெரிவிக்கும்படி அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக உள்துறை செயலர், ஆளுநரின் செயலகத்துக்கு கடிதம் அனுப்பி அமைச்சரவை பரிந்துரையின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டிருந்தார். அந்தக் கடிதத்துக்கு ஆளுநர் செயலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஜெயின் கமிஷன் விசாரணையில் சதித்திட்டம் ஆராயப்பட வேண்டும் என்று கூறி, சிபிஐ, ஐபி உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கிய பல்துறை கண்காணிப்பு முகமை (எம்டிஎம்ஏ) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முடியவில்லை. பேரறிவாளன் ‘என் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதை விசாரணை அதிகாரியே கூறியிருப்பதால் நான் குற்றம் செய்யவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியபோது, ‘எம்டிஎம்ஏ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிவிக்கை வந்தால்தான் முடிவெடுக்க முடியும்’ என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் மாளிகை, ‘அந்த வழக்கில் எம்டிஎம்ஏ அளிக்கும் விசாரணை அறிக்கையின்படி முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற அனைவரது ஆசையும் விரைவில் நிறைவேறும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x