Published : 15 Mar 2020 09:22 AM
Last Updated : 15 Mar 2020 09:22 AM

உலக சுகாதார நிறுவன அறிவுரையை மீறி பல ஆயிரம் மக்களை கூட்டி அரசு விழாக்களை நடத்துவதா?- கோவிட்-19 விவகாரத்தில் மக்கள் அதிர்ச்சி

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை மதிக்காமல் தமிழக அரசே ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டி விழா நடத்துவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 129-க்கும் நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸால் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் உயிரிழப்பு 2 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடுமுழுவதும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும்பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறது.

இதனிடையே கோவிட்-19 பெருந்தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இந்த வைரஸ் தாக்குதலை தேசியபேரிடராக இந்தியாவும் அறிவித்தது. கோவிட்-19 வைரஸ்ஸை பெருந்தொற்று நோயாக அறிவித்திருந்த உலக சுகாதார நிறுவனம் வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தடுக்க வேண்டும் என்று பாதிப்புள்ள நாடுகளுக்கு அறிவுரைவழங்கியுள்ளது. இதனை கடைபிடிப்பதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியளித்துள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவுரையை கடைப்பிடிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் அதற்குநேர்மாறாக ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க வைத்து தமிழக அரசே அரசு விழாக்களை நடத்தி வருகிறது. நேற்று கூட திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், அதிகாரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உலகசுகாதார நிறுவனத்தின் அறிவுரைமற்றும் மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டமாக கூட்டி விழா நடத்தும் தமிழக அரசின் நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையசெய்துள்ளது. இந்நோய் தாக்கம் தீரும் வரை அரசு நிகழ்ச்சிகள், விழாக்களை தள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x