Published : 10 Mar 2020 07:51 AM
Last Updated : 10 Mar 2020 07:51 AM

ஏப்ரல் 1 முதல் பி.எஸ். 6 தொழில்நுட்பம் கட்டாயம்; இருசக்கர வாகனங்களின் விலை 15 சதவீதம் உயர்கிறது: இருப்பில் உள்ள பி.எஸ்.4 வாகனங்களுக்கு ரூ.15,000 வரை சலுகை

கோவை (மைய) ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பி.எஸ்.4 வாகனங்கள். படம்:ஜெ.மனோகரன்

கோவை

க.சக்திவேல்

புதிய இருசக்கர வாகனங்களில் காற்று மாசை குறைக்கும் பி.எஸ்.6 தொழில்நுட்பம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களின் விலை 15 சதவீதம் வரை உயர உள்ளது.

காற்று மாசை ஏற்படுத்துவதில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க வாகன இன்ஜின் மற்றும் எரிபொருளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்கள் பி.எஸ்.6 (Bharat Stage-VI) தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டும். தற்போது விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் பி.எஸ்.4 தொழில்நுட்பத்தில் இயக்கப்படுகின்றன. எனவே, ஏப்ரல் 1 முதல் பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் (ஆர்டிஓ) மாநில போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 31 வரை கெடு

இதுதொடர்பாக கோவை (மைய) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, “பி.எஸ்.4 வாகனங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே பதிவு செய்யப்படும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்கள் பதிவு செய்யப்படாது. அனைத்து இருசக்கர வாகன விற்பனையாளர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே இந்த உத்தரவை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதால், பி.எஸ்.4 ரக வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. புதிய இருசக்கர வாகனங்கள் பி.எஸ்.6 தொழில்நுட்பத்தில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இருப்பில் உள்ள புதிய பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் (மார்ச் 14, 21, 28) வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட உள்ளன” என்றார்.

பி.எஸ்.4 பி.எஸ்.6 வேறுபாடு

தற்போது இருப்பில் உள்ள பி.எஸ்.4 ரக இருசக்கர வாகனங்களை மார்ச் 31-க்கு பிறகு பதிவு செய்ய முடியாது என்பதால், அனைத்து முன்னணி விற்பனை நிறுவனங்களும் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை மாடலுக்கு ஏற்ப வாகனங்களுக்கு விலை குறைப்பு செய்துள்ளன.

இருசக்கர வாகன விற்பனையாளர்கள் கூறும்போது, “பி.எஸ்.6 ரக இருசக்கர வாகனங்களில் கார்பரேட்டருக்கு பதில், ‘பியூயல் இன்ஜெக்டர்’ பொருத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.4 வாகனங்களில் கார்பரேட்டர்தான் பெட்ரோலை காற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சிலிண்டருக்குள் அனுப்பும். இதனால் பெட்ரோலையும், காற்றையும் கலக்கும் விகிதம் மாறுபடுவது, எங்காவது கசிவு ஏற்படுவது போன்றவை நிகழ்ந்து எரிபொருள் வீணாகும். இந்த குறைபாடு பி.எஸ்.6 இன்ஜினில் தவிர்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஃப்யூயல் இன்ஜெக்டரும் சரியான அளவு பெட்ரோலையே செலுத்தும். இதனால் எரிபொருள் வீணாக்கப்படுவதில்லை. காற்று மாசும் குறைகிறது. சற்று கூடுதலான மைலேஜூம் கிடைக்கும். எனவே, பி.எஸ்.6 இன்ஜின் மற்றும் வாகன பாகங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வாகனத்தின் விலை உயர்கிறது. தயாரிப்பு நிறுவனம், மாடலுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6 சதவீதம் முதல் அதிகபட்சம் 15 சதவீதம் வரை இருசக்கர வாகனங்களில் விலை உயர்கிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x