Published : 07 Mar 2020 07:45 AM
Last Updated : 07 Mar 2020 07:45 AM

ஒரே மாதத்தில் கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு: கோவிட்-19 வைரஸ் பீதியால் நஷ்டம் என நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தகவல்

கோவிட்-19 வைரஸ் பீதியால் கோழி மற்றும் முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நாமக்கல் எம்.பி சின்ராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பியும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான சின்ராஜ் நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் கோழிகளுக்கு கோவிட்-19 வைரஸ் பரவி வருகிறது என்று புரளியைக் கிளப்பியதால் முட்டை மற்றும் கோழிக்கறி சாப்பிடுவதை பலர் தவிர்த்துள்ளனர். இதனால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 4 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினசரி சுமார் 1 லட்சம் கிலோ பிராய்லர் கோழி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ.3.70 ஆகிறது, தற்போது ஒரு முட்டை ரூ.2.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1.10 நஷ்டம் ஏற்படுகிறது. பிராய்லர் கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செலவு ரூ.72 ஆகிறது. ஒரு கிலோ கறிக்கோழி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு ரூ.42 நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் முட்டைக்கோழித் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.3.30 கோடி இழப்பு ஏற்படுகிறது. முட்டைக்கோழிப் பண்ணையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கறிக்கோழித் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.42 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. பிராய்லர் கோழிப்பண்ணையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ரூ.12.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

கடும் நஷ்டத்தால் சுமார் 20 சதவீதம் பண்ணையாளர்கள் பண்ணைகளை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டனர். எனவே இத்தொழிலில் நலிவடையாமல் பாதுகாக்க கோழிப்பண்ணையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனை ஒரு ஆண்டு வட்டி இல்லாமல் தள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் பாதித்தவர்களுக்கு ஊட்டச் சத்துக்காக கோழி சூப் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் குறித்து வதந்தியைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் கோழி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கோவிட்-19 பாதிக்காது என்பதை வலியுறுத்தும் வகையில் விரைவில் நாமக்கல் நகரில் சிக்கன் மற்றும் முட்டை மேளா நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x