Last Updated : 06 Mar, 2020 02:57 PM

 

Published : 06 Mar 2020 02:57 PM
Last Updated : 06 Mar 2020 02:57 PM

கரோனா: புதுச்சேரியில் முகக்கவசம் அணிவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

கரோனோ வைரஸ் அச்சத்தால் முகக்கவசம் அணிவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ நடவடிக்கை என புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அனைவரும் அணிய வேண்டியதில்லை எனவும் சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் புதுச்சேரியில் முகக்கவசம் விற்பனையும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் அச்சத்தால் பலரும் முகக் கவசத்தை அணிய தொடங்கியுள்ளனர். முகத்தைக் கைக்குட்டையால் கட்டிக்கொள்வது தொடங்கி மருந்துக் கடைகளில் கிடைக்கும் முகக்கவசம் வரை பலரும் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவ வட்டாரங்களில் விசாரித்தபோது, "வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க எண்-95 எனப்படும் சிறப்பு முகக்கவசங்கள் உபயோகிப்பது நல்லது என்று கூறப்பட்டாலும் அனைவருக்கும் இந்த வகை முகக்கவசம் கிடைப்பது சிரமம். இதன் விலை அதிகமானது.

பொதுமக்கள் மூன்று லேயர் கொண்ட சாதாரண சர்ஜிக்கல் முகக்கவசங்கள் உபயோகித்தால் போதுமானது. இருப்பினும் தமிழகத்திலோ, புதுச்சேரியிலோ அதிகாரபூர்வமாக அரசாங்கத்திடமிருந்தோ சுகாதாரத்துறையிடமிருந்தோ அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் என்ற வேண்டுகோள் விடப்படவில்லை.

எனவே, முகக்கவசம் என்பது இப்போதைக்குக் கட்டாயம் கிடையாது. இருப்பினும் இருமல், சளி மற்றும் தொற்று இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது பிறருக்கு நோயைப் பரப்பாமல் இருக்க உதவும். மேலும், எதிர்ப்பு சக்தி குறைவான வயதினரான குழந்தைகள், முதியோர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, சிறுநீரக நோயாளிகள் போன்றோர் வெளி இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்.

சிங்கப்பூர் அரசாங்கம் தனது குடிமக்கள் அனைவருக்கும் தலா நான்கு சர்ஜிக்கல் மாஸ்க்குகள் இலவசமாக வழங்கியிருக்கிறது" என்று தெரிவித்தனர்.

இச்சூழலில் அரசே தேவைப்படுவோருக்கு முகக்கவசங்களை இலவசமாகத் தர வேண்டும் என்ற வலியுறுத்தலும் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "தற்போதைய சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. அச்சம் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். குறிப்பாக, சளி, தும்மல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது.

முகக்கவசங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. அதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசு உதவி செய்வதாக தெரிவித்துள்ளது. எனவே, புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு முகக்கவசங்களை விற்றாலோ, பதுக்கினோலா தகவல் தரலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x