Published : 05 Mar 2020 07:39 AM
Last Updated : 05 Mar 2020 07:39 AM

தார் சாலைக்காக காத்திருக்கும் கானமலை கிராம மக்கள்; ரேஷன் பொருட்களை 10 கி.மீ தொலைவுக்கு சுமந்து செல்கின்றனர்: வயதானவர்கள், கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்ல வேண்டிய அவலம்

கண்ணமங்கலம் கானமலை கிரா மத்துக்கு சரியான தார்ச்சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் 10 கி.மீ தொலைவுக்கு தலையில் சுமந்தபடி ரேஷன் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வட்டத்துக்கு உட்பட்ட கானமலை கிராமம் தனி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்துக்குச் செல்ல படவேட்டில் இருந்து அர்ஜூனாபுரம், முருகாபாடி, புதூர் கிராமம் வழியாகத்தான் சென்றுவர வேண்டும். வேறு பாதை எதுவும் கிடையாது. கானமலை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத்தோப்பு, எலந்தப்பட்டு, கீழ் முருகமந்தை, மேல் முருகமந்தை என குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான் பிரதான தொழிலாக உள்ளன.

கானமலையில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக மலையில் இருந்து கீழே இறங்கி 20 கி.மீ தொலைவில் உள்ள படவேடு அல்லது 30 கி.மீ தொலைவில் உள்ள கண்ணமங்கலத்துக் குத்தான் செல்ல வேண் டும்.

வனப்பகுதியில் இருந்து ஒற்றையடி பாதைதான் இவர்களின் பிரதான பாதையாக இருந்து வந்தது. இதற்கிடையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒற்றையடி பாதை நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு மண் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால், போதுமான வாகன வசதியும் இல்லாத நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களையும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கிச் செல்கின்றனர்.

ரேஷனுக்கு 10 கி.மீ

கானமலை மலைவாழ் மக்களுக்கு மலையடிவாரத்தில் உள்ள முருகாபாடி கிராமத்தில் தான் ரேஷன் கடை உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல மலையடிவாரத்துக்கு 10 கி.மீ தொலைவுக்கு கீழே இறங்கி வந்து பொருட்களை வாங்கி தலையில் சுமந்து செல்கின்றனர்.

இதுகுறித்து கானமலை பகுதி மக்கள் கூறும்போது, ‘‘எங்கள் மலை கிராம மக்களின் அடிப்படை தேவைக்கு படவேடு, கண்ணமங்கலம்தான் தீர்வாக இருக்கிறது. ஆனால், எங்கள் கிராமத்துக்கு சரியான சாலை வசதி அமைத்துக் கொடுத்தால் மட்டுமே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உயரும். எங்கள் மலை கிராமத்தில் இருப்பவர்களுக்கு அருகே உள்ள மலைக் கிராமத்தில் இருந்துகூட பெண் தர மறுக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தார்கள், சென்றார்கள். அவர்கள், வந்தபோதெல்லாம் நிச்சயமாக சாலை வசதி கிடைக்கும் என்றார்கள். ஆனால், எப்போது கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x