Published : 04 Mar 2020 09:35 AM
Last Updated : 04 Mar 2020 09:35 AM

தமிழகத்தில் 2021 தேர்தலுக்கு பிறகு பாஜக அங்கம் வகிக்கக்கூடிய அரசு அமையும்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கக் கூடிய அரசுதான் வந்தாக வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மக்களும் அதையே விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு வந்த பாஜக தேசியபொதுச் செயலர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்ஆகியோர் காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வரும் 2021-ம்ஆண்டு தேர்தலை கவனத்தில்வைத்து செயல்பட்டு வருகிறோம்.இந்த தேர்தலில் பாஜக அங்கம்வகிக்கக் கூடிய அரசுதான் வந்தாகவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கும்.

குடியுரிமைச் சட்டம் என்பது இந்தநாட்டில் வாழும் யாரையும் அப்புறப்படுத்தக் கூடிய சட்டம் இல்லை என்பதை பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்; நாமும் கூறியுள்ளோம். ஆனால், துரதிருஷ்டவசமாக திமுக அதனை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது. கலவரம் உருவாக்க வேண்டும்; இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழக் கூடாது என்ற சிந்தனையுடன் திமுகசெயல்படுகிறது. 2021-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அவர்கள் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் பேச்சுக்களையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசும் பேச்சுக்களையும் கவனித்தால் ஒத்து அமைத்திருப்பதுபோல் தெரிகிறது. நாடு மீண்டும் பிளவுபடவேண்டும் என்று திமுக விரும்புகிறது. 1947-ல் நாடு பிளவுபட்டபோது, 'கஷ்டப்பட்டு பாகிஸ்தானை பெற்றோம். சிரித்துக் கொண்டே இந்துஸ்தானை பெறுவோம்' என்றுஜின்னா சொன்னார். ஜின்னா சொன்னதை நடைமுறைப்படுத்தும் வகையில் திமுகவின் தலைவர் செயல்படுகிறார். பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்களை எப்படி இங்கு கொண்டு வந்து குடி வைக்க முடியும். அவரின் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றார்.

சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் வெளியேறப்போவதாக செய்திகள் வந்துள்ளது குறித்து கேட்டபோது, "அது குறித்து பிரமதரும், அவரது அலுவலகமும் என்னமுடிவு எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. எனவே, அது தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x