Last Updated : 02 Mar, 2020 05:38 PM

 

Published : 02 Mar 2020 05:38 PM
Last Updated : 02 Mar 2020 05:38 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் 46 சட்டவிரோத ஆழ்துளை கிணறுகளுக்கு சீல்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 46 சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்களை பெற்றார்.

அப்போது 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், வருவாய் துறை மூலம் கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய 16 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 13 பேருக்கு ரூ.1.30 லட்சம் உதவித் தொகை, பட்டுவளர்ச்சி துறை சார்பில் வெண்பட்டு கூடு அறுவடையில் சாதனை படைத்த 3 விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் பரிசு தொகை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு வீட்டுமனை பட்டா ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

கேன் குடிநீர் நிறுவனங்கள்:

முன்னதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 46 சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தின் 42 கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் உணவு பாதுகாப்பு துறை உரிமங்களை பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யாத சட்டவிரோத நிறுவனங்கள் ஏதும் நமது மாவட்டத்தில் இல்லை.

கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுக்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தடையில்லா சான்றுகளை பெற்றுள்ளனவா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதன்படி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு வராது:

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள குளங்களில் 75 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. எனவே, கோடை காலத்தில் மாவட்டத்தில் எந்த குடிநீர் தட்டுப்பாடும் வராது. இருப்பினும் நிலமையை கண்காணித்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் அதனை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிசான சாகுபடிக்கே இந்த மாத இறுதி வரை தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதற்கு பிறகு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்.

மேம்பால பணிகள்:

தூத்துக்குடி ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் நடைபெறவுள்ளது. இந்த பணி 1-ம் கேட் வரை வரவுள்ளது. எனவே, 1-ம் கேட்டை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ம் கேட்டை மூடிவதா அல்லது சுரங்கப்பாதை அமைப்பதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் சிப்காட் அருகேயுள்ள ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே துறை இடையே சிறிய பிரச்சினை உள்ளது. அதாவது ஏற்கனவே அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பாலம் கட்டுமான பணிகள் தரமானதாக இல்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனை சரி செய்த பிறகு தான் மேற்கொண்டு பணிகளை செய்ய அனுமதி அளிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

எனவே, அதனை சரி செய்வது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து வருகிறது. எனவே, பணிகள் தொடங்க 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். அதுவரை அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க சாலை தடுப்புகள், எச்சரிக்கை விளக்குகள், அறிவிப்பு பலகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x