Published : 02 Mar 2020 11:00 AM
Last Updated : 02 Mar 2020 11:00 AM

எச்சூழலிலும் நாடாளுமன்றத்தை முடக்கி பொருளாதாரத்தை வீணாக்கக் கூடாது: ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்

தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களின் நலனைக் காக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எப்பொழுது நடைபெற்றாலும் அக்கூட்டத்தொடர் முடியும் நாள் வரையில் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காரணம் ஆளும் ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கும் பயனுள்ளதாக நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பது தான்.

அதாவது, நாடாளுமன்றம் நடைபெறும்போது அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மசோதா தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படி இருக்கும்போது மசோதா குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது தொடர்பாக கேள்வி எழுப்பலாம், பதிலை பெறலாம். அதை விடுத்து மசோதாவை தாக்கல் செய்யும்போதே கூச்சலிடுவதும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல.

அதேபோல, நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உறுப்பினர்கள் பேசும்போது தேவையில்லாமல் குறுக்கீடுகள் செய்வதும், நாடாளுமன்றத்தை முடக்குவதும் ஜனநாயகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்மை பயக்காது. மேலும், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரின் பேச்சுக்கும், திட்டத்துக்கும், மசோதாவுக்கும் எதிர்கட்சிகள் எழுப்பும் சந்தேகத்தைப் போக்க வேண்டியது ஆளும் கட்சியின் கடமை.

அதே சமயம், ஆளும் கட்சியின் நியாயமான பதிலை, விளக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது எதிர்கட்சியின் கடமை. எனவே, எச்சூழலிலும் நாடாளுமன்றத்தை முடக்கி பொருளாதாரத்தை வீணாக்கக்கூடாது. அதாவது மக்களின் வரிப்பணமானது நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான செலவுக்கும் பயன்படுகிறது என்பதை மனதில் வைத்தும், நமது நாட்டின் இப்போதைய பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டும் செயல்பட்டால் மக்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.

எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளான மக்களவையும், மாநிலங்களவையும் கூச்சல், குழப்பம், முடக்கம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் நடைபெற இரு அவைகளின் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் வாழ்வில் முன்னேற, நாடு வளம் பெற்று பாதுகாப்பாக இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நிலவும் நியாயமான பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படுத்தித் தரவும், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறவும் குரல் கொடுத்து தமிழக மக்கள் நலன் காக்கவும், தமிழகம் முன்னேற்றம் அடையவும் வழிவகுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x