Published : 28 Feb 2020 08:22 AM
Last Updated : 28 Feb 2020 08:22 AM

மதுபானக்கடைகள் வேண்டாம் என்று நிறைவேற்றிய கிராமசபை தீர்மானத்தை அமல்படுத்த தயக்கம் ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுபானக்கடைகள் வேண்டாம் என கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறை வேற்றினால் அதை அமல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘டாஸ்மாக் தொடர்பான பிரச்சினை முழுக்க, முழுக்க அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சினையாக உள்ளது. மாநில அரசு எப்போதும் மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட வேண்டும். குடிமக்கள் ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் காக்க வேண்டியது அரசின் கடமை. டாஸ்மாக் மதுபானக்கடைகள் வேண்டாம் என கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றினால், அதை அமல்படுத்த அரசு தயங்குவது ஏன்? என்பது் புரியவில்லை.

மக்கள் நலன் சார்ந்து கிராம பஞ்சாயத்துக்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாநில அரசுகள் ஏன் செவிசாய்க்கக்கூடாது? தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக்கூறும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு அதை அமல்படுத்தாமல் விட்டுவிடுவது ஏன்? மதுபான விற்பனை அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் கூட வருங்கால இளைய தலைமுறையின் நலன் சார்ந்தும் சில முடிவுகளை எடுக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கடந்த 2004 முதல் 2020 வரை 35 சதவீதம் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. 12 மணி நேரமாக இருந்த மதுபான கடையின் விற்பனை நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. கிராமசபைக் கூட்டங்களில் ஏற்கெனவே 8 வழிச்சாலை, சிஏஏ, நீட் போன்ற தேர்வுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்த தீர்மானங்களை சட்டவிதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து வருகிறோம் என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மதுபான கடைகள் அமைப்பதற்கு முன் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்கக் கூடாது? மது விற்பனையை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறையின் மூலமாக சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவது வேதனைக்குரியது. கோயில் பகுதியில் அசைவ உணவு கடைகள் நடத்தக்கூடாது என அறிவித்த தமிழக அரசு, மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது எனஏன் அறிவிக்கவில்லை? கடந்த16 ஆண்டுகளில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறும் அரசு, மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என உறுதிபடக்கூற முடியுமா? என்றனர்.

அதன்பிறகு கடந்த 2017-ம்ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைப்பதற்கான நடைமுறை குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையை ஏற்க முடியாது என்ற நீதிபதிகள், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்.17-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x